background img

புதிய வரவு

62 ஆண்டுகளாக சாராயம் காய்ச்சிய கிராமத்திற்கு விடிவு: போலீசாரின் தொடர் முயற்சி வெற்றி

ஆலந்தூர் : மது விலக்கு போலீசாரின் தொடர் முயற்சியில், 62 ஆண்டுகளாக சாராயம் காய்ச்சுவதை குடிசைத் தொழிலாக செய்து வந்த கிராம மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.


சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள வடக்கு மலையம்பாக்கம் கிராமம் இருந்தது. இங்கு, கடந்த 1947ம் ஆண்டு முதல் வீட்டுக்கு வீடு குடிசை தொழிலாக சாராயத்தை காய்ச்சத் துவங்கினர்.கணவன்மார்கள் காய்ச்சும் சாராயத்தை மனைவிமார்கள் விற்பனை செய்தனர். வடக்கு மலையம்பாக்கம் சாராயத்தை ருசிக்க, மாங்காடு, நசரத்பேட்டை, பூந்தமல்லி, குன்றத்தூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து குடிமகன்கள் குவிந்தனர். போலீசார் ரெய்டு நடத்தும் போது தலைமறைவாகிவிடுவதும், போலீசார் சென்றபின், மீண்டும் தங்கள் தொழிலை துவங்குவதும் இங்கு வழக்கமாக இருந்தது.பல நேரங்களில் ஏமாற்றத்துடன் போலீசாருக்கு, சில நேரங்களில், அதிர்ச்சி அளிக்கும் வகையில், தாக்குதலிலும் சிக்கியதும் உண்டு. வடக்கு மலையம்பாக்கம் கிராமத்தில் சாராயம் காய்ச்சுவதை யாராலும் தடுக்க முடியாது என்ற சூழலில், புறநகர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்குட்பட்ட குன்றத்தூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் கடந்த 2009ம் ஆண்டு முதல் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.


சாராயம் காய்ச்சுபவர்களை பிடித்து, அடுத்தடுத்து வழக்கு போட்டனர். கைதானவர்களை ஜாமீனில் எடுக்கும், வடக்குமலையம்பாக்கம் கிராம ஊர் தலைவர்கள், குன்றத்தூர் மதுவிலக்கு போலீசார் மீது உயர் அதிகாரிகளிடம் புகார்களை கொடுத்தனர். ஒரு கட்டத்தில், வடக்கு மலையம்பாக்கம் கிராம சாராய வியாபாரிகள், கிராமத் தலைவர்களின் கூட்டம் ஒன்றுக்கு புறநகர் கமிஷனர் ஜாங்கிட் ஏற்பாடு செய்தார்.அந்த கூட்டத்திற்கு பின், அப்பகுதியில் போலீஸ் கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட்டது. கிராமத்தில் சாராயம் காய்ச்சுவதை தடுக்க போலீசார் அங்கு நிரந்தரமாக தங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு, ஊர்த் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, அவதூறுகளை பரப்பினர். போலீசாருக்கு வீடு தர யாரும் முன்வரவில்லை. இருப்பினும், சாராயம் காய்ச்சுவதை ஒழிக்கும் முயற்சியில் இருந்து போலீசார் பின்வாங்கவில்லை.


பல கட்ட முயற்சிக்குபின், பாதிரியார் ஒருவரின் உதவியுடன் கிராமத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து போலீசார் தங்கினர். பின், சாராயம் காய்ச்சுபவர்களின் விவரங்களை போலீசார் சேகரித்து கைது செய்தனர். இதற்கு ஊர் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்த நடவடிக்கையால் சாராய வியாபாரம் ஓரளவிற்கு குறைந்தது. அடுத்த கட்டமாக, சாராயம் காய்ச்சுபவர்களை வேறு வேலைக்கு போகும்படி போலீசார் அறிவுறுத்தினர். ஆனால், இத்திட்டத்திற்கு ஒத்துழைப்பில்லை. எனவே, வடக்கு மலையம்பாக்கத்திற்கு சாராயம் குடிக்க வரும் குடிமகன்களை கட்டுப்படுத்த திட்டமிடப்பட்டது.


இம்முயற்சி நல்ல பலன் அளித்தது. சாராயம் குடிக்க வருபவர்களின் எண்ணிக்கை குறையத் துவங்கியது. காய்ச்சிய சாராயம் விற்பனையாகாமல் போனதால் சாராயம் காய்ச்சுபவர்கள் சிரமப்பட்டனர். இதில் வெறுப்படைந்த சிலர், மனம் திருந்தி, சுயதொழில் துவங்குவதற்கு ஒப்புக் கொண்டனர்.கடந்த 2009ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அந்த கிராமத்தில் சாராயம் காய்ச்சுவதை அறவே விட்டுவிட்டனர். தற்போது, கறவை மாடுகளை வைத்து பால் வியாபாரமும், இட்லி சுட்டும், பூ மற்றும் துணி வியாபாரமும் செய்ய துவங்கியுள்ளனர். இன்று சாராயம் என்னெவென்றே தெரியாத கிராமமாக மாறிவிட்டது. தற்போது மனம் திருந்தி வாழ்ந்து வருபவர்கள் சுயதொழில் செய்வதற்கு கடந்த 2009ம் ஆண்டு 9 பேர் தலா 10 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றனர். இந்த வகையில், கடந்த 62 ஆண்டுகளாக குடிசை தொழிலாக சாராயம் காய்ச்சிய வடக்கு மலையம்பாக்கம் கிராமம் இன்று விடியலுக்கு வந்துள்ளது.


விதவைகள் கிராமம்! சாராயத்தை காய்ச்சுபவர்கள், அதை ருசிப்பார்ப்பது வழக்கம். அதுபோல ருசிப்பார்த்து சாராயத்திற்கு பலர் அடிமையாகி இறந்து விட்டனர். தப்பி தவறி இருந்தாலும் 50 வயதுக்கு மேல் ஆண்கள் இருப்பதில்லை. இதன் காரணமாக, வடக்கு மலையம்பாக்கம் கிராமத்தில் இளவயது விதவைகள் அதிகமாக காணப்படுகின்றனர். சாராயம் முற்றிலுமாக தற்போது ஒழிக்கப்பட்டுள்ள நிலையில், இளம் விதவைகளின் எண்ணிக்கையும் எதிர்காலத்தில் குறையும் என்பதில் மாற்றமில்லை.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts