background img

புதிய வரவு

வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்கள் கறுப்பு பணத்தை திரும்ப கொண்டுவர வேண்டும்; ராகுல்காந்தி வற்புறுத்தல்

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி மராட்டிய மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவுரங்காபாத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-


இந்திய அரசியல் கட்சிகளில் ஜனநாயகம் இல்லை. கட்சிகளில் ஜனநாயகம் இருந்தால்தான் அது நாட்டுக்கு நல்லதை தர முடியும். எங்களை பொறுத்த வரை கட்சியில் இளைஞர் காங்கிரஸ் தேர்தலை உண்மையாக நடத்தி இருக்கிறோம். இளைஞர்கள் அரசியலுக்கு வர ஆர்வம் காட்ட வேண்டும். இதை அவர்கள் தங்களுடைய கடமையாக கருத வேண்டும். இளைஞர்கள் அதிக அளவில் அரசியலுக்கு வரும் வகையில் அரசியல் அடிப்படைகளே மாற வேண்டும்.


உங்கள் வாழ்க்கையில் 10 வருடத்தை அரசியலுக்காக ஒதுங்குகள். இதன் மூலம் நிச்சயம் பெரும் மாற்றத்தை உருவாக்க முடியும். தற்போது கெட்டு கிடக்கும் இந்த அரசியல் அடிப்படைகளை நம்மால் மாற்ற முடியும். என்னுடைய முழு கவனமும் அதில்தான் இருக்கிறது. அரசியல் என்பது எல்லோரும் எளிதாக பங்கு பெறும் வகையில் திறந்த கதவாக இருக்க வேண்டும்.


அரசியல் என்றாலே ஊழல் தான் என்று பொதுமக்கள் நினைக்கிறார்கள். அரசியல் நடைமுறைகள் இப்போது இருப்பது போல தொடர்ந்தால் மக்களிடம் இந்த எண்ணம் தான் மேலோங்கும். எனவே அரசியல் அடிப்படைகளையே மாற்றி அமைத்தால் தான் இதை தடுக்க முடியும். என்னை அடுத்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி பிரதமர் பதவிக்கு முன் நிறுத்தும் என்று நீங்கள் (நிருபர்கள்) சொல்வது உங்களுடைய அனுமானம். நான் அப்படி கருதவில்லை. ஆனால் அரசியல் அமைப்பை பழுது பார்க்க வேண்டும் என்பதையே நான் ஒரே குறிக்கோளாக கொண்டுள்ளேன்.


வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் இந்தியர்களின் கறுப்பு பணத்தை கண்டு பிடித்து திரும்ப கொண்டு வர இன்னும் அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இது இந்தியாவின் பணம், இந்திய மக்களின் பணம். அதை விடக்கூடாது. இந்த பணம் திரும்ப வரும் என்ற உத்தரவாதம் வேண்டும்.


மராட்டியத்தில் மண் எண்ணை கடத்தல் கும்பலால் துணை கலெக்டர் கொல்லப்பட்டது அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். இது போன்ற சம்பவங்கள் இனிமேல் ஒரு போதும் நடக்க கூடாது. இதில் மத்திய - மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


அடிமட்ட அளவில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவே கிராமங்களில் நான் அடிக்கடி சுற்றுப்பயணம் செல்கிறேன். ஏழை மக்களை சந்தித்து பேசுகிறேன்.


இவ்வாறு ராகுல்காந்தி கூறினார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts