திருமங்கலம் இடைத்தேர்தல் வழக்கில் அ.இ.அ.தி.மு.க. பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம் உள்பட 5 பேருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
2008ஆம் ஆண்டு நடைபெற்ற திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலின்போது பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தியதாக ஓ. பன்னீர்செல்வம், செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன் உள்பட அ.இ.அ.தி.மு.க.வைச் சேர்ந்த 20 பேர் மீது திருமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் ஓ. பன்னீர்செல்வம் உள்பட 20 பேரும் ஆஜராகாததால் நீதிமன்றம் பிணையில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பித்தது.
இந்த பிடியாணையை ரத்து செய்யக் கோரியும், முன் பிணை வழங்கக் கோரியும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஓ.பன்னீர் செல்வம் உள்பட 20 பேரும் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பன்னீர் செல்வம் உள்பட 20 பேருக்கு முன்பிணை வழங்கியதோடு திருமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜராகி பிணை பெற்றுக் கொள்ளும்படி உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் திருமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன் உள்பட 5 பேர் இன்று ஆஜராகினர். அப்போது, 5 பேரின் பிடியாணையை ரத்து செய்து திருமங்கலம் நீதிமன்றம் பிணை வழங்கியது.
0 comments :
Post a Comment