அமைச்சரவையை நீக்கி துணை அதிபரை நியமித்த முபாரக்: மக்கள் போராட்டம் தொடர்கிற
கெய்ரோ: கடந்த 30 ஆண்டுகளாக எகிப்தில் ஆட்சி நடத்தி வரும் அதிபர் முபாரக் நேற்று தனது அமைச்சரவையை நீக்கினார். மேலும், இதுவரை இல்லாத துணை அதிபர் பதவியை உருவாக்கி புதிய துணை அதிபரை நியமித்துள்ளார். இருப்பினும், முபாரக் பதவி விலக வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையுடன் ஊரடங்கு உத்தரவையும் பொருட்படுத்தாமல் மக்கள் தொடர்ந்து போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
உளவுத்துறை தலைவர் உமர் சுலைமான் துணை அதிபராகவும், ராணுவ அதிகாரியான அஹமது ஷபீக் பிரதமராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பால் மக்கள் ஓரளவு திருப்தி அடைந்துள்ளனர். முபாரக் (82) இந்நாள் வரை தனது மகனை தனக்கு பின் ஆட்சியில் அமர வைக்கத் திட்டமிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம், முபாரக் விலக வேண்டும் என்ற கோரிக்கையிலிருந்து மக்கள் இன்னும் விலகவில்லை. கலவரத்தை அடக்க முயலும் ராணுவத்தையும் தங்களுடன் சேருமாறு அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். நேற்று கெய்ரோவில் உள்ள வரி ஆணைய கட்டிடத்திற்கு தீ வைக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.
இதற்கிடையே ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து தலைவர்கள் மக்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறையை நிறுத்திவிட்டு, தேர்தல் நடத்துமாறு கூட்டாக முபாரக்கை வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த வாரம் துவங்கிய முபாரக்கிற்கு எதிரான போராட்டங்களில் குறைந்தது 74 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மேலும், தலைநகர் கெய்ரோவில் மட்டும் சுமார் 1, 030 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா எகிப்து விவகாரம் குறித்து துணை அதிபர் ஜோ பிடன் மற்றும் தலைமை பாதுகாப்பு ஆலோசகர் டாம் டோனிலனுடன் கலந்தாலோசனை நடத்தியுள்ளார்.
மக்கள் தனக்கு எதிராக போராட்டங்கள் நடத்தத் துவங்கியவுடன் முபாரக் அவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டுள்ளார். ஆனால் அவை பலனில்லாம்ல போனது. போராட்டக்காரர்கள் ஊரடங்கு உத்தரவையும் மதிக்காது தெருக்களில் போராட்டம் நடத்தினர். அங்கு குவிக்கப்பட்டிருந்த ராணுவ அதிகாரிகள் மக்களை தடுத்து நிறுத்தவில்லை.
இது குறித்து ஒரு போராட்டக்காரர் கூறுகையில், உமர் சுலைமான் இன்னொரு முபாரக். அவரால் எந்த மாற்றமும் ஏற்படாது. முபாரக் தான் கடைசியாக துணை அதிபராக இருந்தார். அவர் கடந்த 1981-ம் ஆண்டு அன்வர் சதாத் கொல்லப்பட்டதை அடுத்து அதிபர் ஆனார் என்றார்.
உள்துறை அமைச்சகத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கானோர் கூடி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் போலீசார் அவர்களை நோக்கி சுடத் தொடங்கினர். இதில் ஒருவர் காயம் அடைந்து அங்கேயே விழுந்தார்.
வன்முறை தொடர்ந்தால் அமெரிக்கா உதவிக்கு வரும் என்று ஹில்லாரி கிளின்டன் தெரிவித்துள்ளார்.
நேற்று அலெக்ஸான்ட்ரியாவில் நடந்த போராட்டத்தில் போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர்.
இது வரை இந்த போராட்டங்களுக்கு ஒரு தலைவர் இல்லை. நோபல் பரிசு பெற்ற முஹமது எல்பராதே நாட்டிற்கு திரும்பினாலும், அவர் தனது வாழ்நாளில் பெரும்பாகம் வெளிநாட்டில் தான் கழி்த்தார் என்று எகிப்தியர்கள் நினைக்கின்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று அனைத்து வங்கிகளும் மூடப்படுகின்றன என்று மத்திய வங்கியின் கவர்னர் ஹஷாம் ரமீஸ் தெரிவித்தார். இது தவிர இன்றைய பங்குச் சந்தையும் மூடப்படுகிறது.
0 comments :
Post a Comment