background img

புதிய வரவு

மீனவர்கள் மீது துப்பாக்கியால் சுடுவதை நியாயப்படுத்த முடியாது: இந்தியா – சிறிலங்கா கூட்டறிக்கை


கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்கள் மீது எந்தச் சூழலிலும் துப்பாக்கியால் சுடுவதை நியாயப்படுத்த முடியாது என்று இந்தியாவும் சிறிலங்காவும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் மீது சிறிலங்க கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் புதுக்கோட்டை, இராமேஸ்வர மீனவர்கள் இரண்டு பேர் கொல்லப்பட்டதையடுத்து தமிழ்நாட்டில் எழுந்த கடும் எதிர்ப்பைச் சமாளிக்க அயலுறவுச் செயலர் நிருபமா ராவை இலங்கைக்கு அனுப்பினார் பிரதமர் மன்மோகன் சிங்.

இன்று காலை இலங்கை வந்த நிருபமா ராவ், சிறிலங்க அயலுறவு அமைச்சர் ஜி.எல்.பெய்ரீஸ் உடன் மீனவர் மீது நடத்தப்படும் தாக்குதல் குறித்து பேசினார். இந்த சந்திப்பிற்குப் பிறகு இரு நாடுகளும் இணைந்து ஒரு கூட்டறிக்கை விடுத்துள்ளன.

அந்த கூட்டறிக்கையில், எந்த சூழலிலும் எல்லைத் தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது நியாயப்படுத்த முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கடற்பரப்பில் சமீபத்தில் இரண்டு இந்திய மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக இந்திய அயலுறவுச் செயலர் நிருபமா ராவ் கவலைத் தெரிவித்ததாகவும், அப்படிப்பட்ட சம்பவங்கள் இதற்கு மேலும் தொடராமல் இருக்க, அச்சம்பவம் குறித்து தீவிரமாக புலனாய்வு செய்து, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

“எல்லைத் தாண்டி வந்து மீன் பிடிக்கும் பிரச்சனையில் - அது இந்திய மீனவர்கள் உட்பட எந்த மீனவர்கள் ஆனாலும் - மனிதாபிமான கண்ணோட்டத்தோடு அணுகுவது என்பதே சிறிலங்க அரசின் கொள்கையாக இருந்து வருகிறது என்று சிறிலங்க அதிகாரிகள் வலியுறுத்தினர்” என்று கூறியுள்ள அந்தக் கூட்டறிக்கை, “இந்த சம்பவத்தின் பின்னணி குறித்த விவரங்களை சிறிலங்க அரசு கண்டுபிடிக்கும். இந்த புலனாய்வில் இந்தியத் தரப்பும் தங்களுக்குக் கிடைக்கும் விவரங்களை சிறிலங்க அதிகாரிகளுக்கு அளிக்க வேண்டும். எந்தச் சூழலிலும் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது என்பதை நியாயப்படுத்த முடியாது என்று இரு தரப்பும் ஒப்புக்கொள்கின்றன” என்று கூறப்பட்டுள்ளது.

“இந்திய - சிறிலங்க அரசுகளுக்கு இடையே 2008ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி கையெழுத்தாகி வெளியிடப்பட்ட மீன் பிடித்தல் தொடர்பான கூட்டறிக்கையில் ஒப்புக்கொண்டபடி, எல்லைத் தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்கள் பிரச்சனையை சமாளிக்க உருவாக்கப்பட்ட ஏற்பாட்டால், மீனவர்களின் மீதான தாக்குதல் குறைந்துள்ளது” என்றும், “மீனவர்களின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்ய இரு நாடுகளும் மீண்டும் பேசுவது என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது” என்றும் கூறப்பட்டுள்ளது.

“மீன் பிடித்தல் தொடர்பாக இரு நாடுகளின் கூட்டுப் பணிக் குழு விரைவில் கூடி பேசுவது என்றும், அப்போது இரு நாடுகளும் மீன் பிடித்தல் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது என்றும் கூட்டறிக்கையில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

மீன் பிடித்தல், மேம்பாடு மற்றும் ஒத்துழைப்பு தொடர்பாக புதியதொரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தவது குறித்தும் இந்த கூட்டுப் பணிக் குழுக் கூட்டத்தில் பேசுவது என்றும், இரு நாடுகளின் மீனவர் அமைப்புகளுக்கிடையே சந்திப்பை ஏற்படுத்தி, அதன் மூலம் இரு தரப்பிற்கும் பயனளிக்கும் வகையில் செயலாற்றுவது என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த கூட்டறிக்கை கூறி முடிக்கிறது.

மொத்தத்தில், இந்த கூட்டறிக்கையில் இந்த மாதத்தில் தமிழக மீனவர்கள் இருவர் கொல்லப்பட்டதை மட்டுமே மையப்படுத்தி இரு நாடுகளும் பேசியுள்ளன. இதுவரை 500க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் சிறிலங்க கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். அது குறித்து இந்த கூட்டறிக்கை ஏதும் பேசப்படவில்லை.

அதுமட்டுமின்றி, இரண்டு மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது தாங்கள் காரணமல்ல என்று சிறிலங்க அரசு கூறியதை ஏற்றுக்கொ்ண்டு இந்த கூட்டறிக்கை விடுக்கப்பட்டுள்ளது ஏமாற்றமளிக்கிறது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts