background img

புதிய வரவு

"நம்பர்-1' அணியில் இருப்பது பெருமை: சச்சின்

மும்பை: ""கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக டெஸ்ட் அரங்கில் தோனி தலைமையிலான இந்திய அணி "நம்பர்-1' இடத்தில் உள்ளது. இதில், இடம் பெற்றிருப்பது மிகவும் பெருமையாக உள்ளது,''
என, சச்சின் தெரிவித்துள்ளார்.


ஒருநாள் கிரிக்கெட்டில் 200 ரன்கள், டெஸ்டில் 50 சதம் அடித்து அசத்தியவர் இந்திய சாதனை பேட்ஸ்மேன் சச்சின். இவருக்கு இந்த ஆண்டின் சிறந்த இந்திய வீரர் மற்றும் ஸ்பெஷல் டெஸ்ட் வீரர் என்ற விருதை, "காஸ்டிரால்' நிறுவனம் வழங்கியது. இதற்கு முன் கடந்த 2009ல், இதே நிறுவனம் வழங்கிய சிறந்த டெஸ்ட் வீரர் விருதும் பெற்றுள்ளார். இவர் தவிர, தோனி, ஹர்பஜன், டிராவிட், யூசுப் பதான் ஆகியோரும் விருது பெற்றனர். விழாவில் பங்கேற்ற சச்சின் கூறியது:


இந்தியாவில் நடந்த டெஸ்ட் போட்டியில், இலங்கை அணியை தோற்கடித்து, இந்திய அணி "நம்பர்-1' டெஸ்ட் அணி என்ற அந்தஸ்தை முதன் முதலாக பெற்றது. அப்போது, இது 30 அல்லது 40 நாட்களுக்குத் தான் நீடிக்கும் என்று, பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்தனர். அடுத்து வந்த தென் ஆப்ரிக்க தொடரில் முதல் டெஸ்டில் தோல்வியடைந்தோம். உடனே "நம்பர்-1' இடம் பறிபோகும் என்றனர். ஆனால், இப்போது ஒரு ஆண்டுக்கும் மேலாக இதே இடத்தில் நீடிக்கிறோம்.
இந்த இடத்தை பெறுவது என்பது அவ்வளவு எளிதல்ல. இதற்காக பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளோம். கடினமாக உழைத்துள்ளோம். பயிற்சியாளர் கிறிஸ்டனும் அணியில் வியக்கத்தக்க வகையில் மாற்றம் கொண்டு வந்தார். கடந்த 2007க்கு பின் அணியில் உள்ள அனைத்து பேட்ஸ்மேன்களும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இத்தகைய அணியில் இருப்பதை மிகவும் பெருமையாக கருதுகிறேன்.


வயது தடையல்ல:
இதுவரை நான்கு முறை காயத்துக்கு "ஆப்பரேஷன்' செய்துள்ளேன். இந்த நேரத்தில் அணியில் வருவதும், போவதுமாக இருந்தேன். பின் 2007க்குப் பின் பெரிய அளவில் காயம் எதுவுமில்லாததால், மகிழ்ச்சியாக உணர்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் கிரிக்கெட்டில், நீடிக்க வயது ஒரு தடையே அல்ல. நான் 16 வயதில் போட்டிகளில் பங்கேற்க துவங்கினேன். இது போல யாரும் எந்த வயதிலும் துவங்கலாம், எவ்வளவு காலம் வேண்டுமானாலும் விளையாடலாம். ஆனால் எப்படி விளையாடுகின்றோம் என்பது தான் முக்கியம். இந்த உலக கோப்பை தொடரில் சிலவற்றை நிறைவேற்ற விரும்புகிறேன். அது என்ன என்பது எல்லோருக்கும் தெரியும்.
இவ்வாறு சச்சின் கூறினார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts