background img

புதிய வரவு

தாமசுக்காக ஏற்கனவே விதிகளை தளர்த்திய மத்திய அரசு : மூத்த அதிகாரி அதிர்ச்சி தகவல்

புதுடில்லி : மத்திய லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையரான பி.ஜே.தாமசை, கேரளாவில் இருந்து, டில்லிப் பணிக்கு கொண்டு வருவதற்காக, சில ஆண்டுகளுக்கு முன்பே விதிகளில் மத்திய அரசு திருத்தம் செய்தது, தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.மத்திய லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையராக பி.ஜே.தாமஸ் கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார்.


இவரது நியமனத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு சமீபத்தில், விசாரணைக்கு வந்த போது, "பாமாயில் இறக்குமதி ஊழல் வழக்கில் தாமசுக்கு எதிராக, கேரளாவில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பதும், அவருக்கு எதிராக வழக்குத் தொடர கேரள அரசு அனுமதி வழங்கியிருப்பதும், அவரை நியமனம் செய்த பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மூவர் குழுவுக்கு தெரியாது' என, தெரிவிக்கப்பட்டது. இதற்கு பாரதிய ஜனதா கட்சியும், மற்ற சில கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், கேரளாவில் மாநில அரசுப் பணியில் இருந்த தாமசை, டில்லியில் மத்திய அரசு பணிக்கு கொண்டு வருவதற்காக, விதிமுறைகளில் சில திருத்தங்கள் செய்யப்பட்டது தற்போது அம்பலமாகியுள்ளது.


இது தொடர்பாக மத்திய அரசின் பணியாளர் நலத்துறை கொள்கையில், மிகுந்த அனுபவம் வாய்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த 2006ம் ஆண்டில் அமலில் இருந்த விதிமுறைகளின்படி, மத்திய அரசில் இணை செயலர் மற்றும் அதற்கு மேலான பதவிகளுக்கு நியமிக்கப்படுவோர், குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் டில்லியில் பணியாற்றி இருக்க வேண்டும்.அப்படி பணியாற்றியவர்கள் மட்டும், இணை செயலர் மற்றும் செயலர்கள் பதவிக்கான பட்டியலில் இடம் பெறுவர். இதன்படி பார்த்தால், கேரள மாநில அரசிலேயே தொடர்ந்து பணியாற்றி வந்த தாமஸ், மத்திய அரசு பதவிக்கு வர முடியாது.ஆனால், இவருக்கு செயலர் பதவி கொடுக்க வேண்டும் என்பதற்காகவே, 2007ம் ஆண்டில் விதிகளில் சில திருத்தங்களை மத்திய அரசு செய்தது.இந்தத் திருத்தங்கள் அடிப்படையில், மாநில அரசுப் பணியில் இருப்போர் மத்திய அரசுக்கு பணிக்கு வர விதி விலக்குகள் அளிக்கப்பட்டன.


அது தாமசுக்கு மிகவும் சாதகமாக அமைந்தது. விதி விலக்கு மூலம் அவர் ஒருவர் மட்டுமே பலன் அடைந்தார். இதன் மூலம் மாநில அரசுப் பணியில் இருந்து மத்திய அரசுப் பணிக்கு மாறிய தாமஸ், முதலில் பார்லிமென்ட் விவகாரத்துறை செயலராக பதவி வகித்தார். பின்னர் தொலை தொடர்புத் துறை செயலரானார். அதன் பின்னர் மத்திய லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப்பட்டார். அந்த நியமனமே தற்போது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.இவ்வாறு மத்திய அரசு அதிகாரி கூறினார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts