background img

புதிய வரவு

ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி? சோனியாவுடன் கவர்னர் சந்திப்பு

புதுடில்லி:காங்கிரஸ் தலைவர் சோனியாவை, ஆந்திர கவர்னர் நரசிம்மன் சந்தித்து பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. சந்திப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள், ஆந்திர கவர்னரை திரும்பப் பெற வேண்டுமென, கோரிக்கை வைத்துள்ளன. ஆந்திராவில் அசாதாரணமான அரசியல் சூழ்நிலை நிலவுவதால், ஜனாதிபதி ஆட்சி கூட அமலாகலாம் என தெரிகிறது.
தெலுங்கானா விவகாரம் ஆந்திராவில் கொழுந்துவிட்டு எரிய துவங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியாவை ஆந்திர கவர்னர் நரசிம்மன் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு ஆந்திர அரசியலில் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது."அரசியல் சாசன அமைப்பின்படி, எந்த ஒரு கவர்னரும், ஜனாதிபதியை மட்டுமே சந்தித்து நிலைமைகளை விளக்க வேண்டும். அவ்வாறு இருக்க, ஒரு அரசியல் கட்சியின் தலைவரை, கவர்னர் சந்தித்துப் பேசியிருப்பதை ஏற்க முடியாது' என்று எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன.

முன்னாள் போலீஸ் அதிகாரியான நரசிம்மன் மத்திய உளவுப்பிரிவில் பணியாற்றியவர். தெலுங்கானா கோரிக்கைக்கு இவர் கடும் எதிர்ப்பை தெரிவிப்பவர் என்பதால், இவரை மாற்ற வேண்டுமென்று ஏற்கனவே சந்திரசேகர் ராவ் உள்ளிட்ட தெலுங்கானா ஆதரவு தரப்பினர் கோரி வருகின்றனர். இந்நிலையில், சோனியாவுடனான அவரின் சந்திப்பு மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆனாலும், சோனியாவுடனான நரசிம்மனின் சந்திப்பு குறித்து வேறு மாதிரியான கருத்தை தெரிவித்துள்ளது காங்கிரஸ். அதாவது தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சிலின் தலைவராக சோனியா உள்ளார். அந்த அடிப்படையில் முதலீட்டு வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக சோனியாவை நரசிம்மன் சந்தித்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்க்கட்சிகள் நம்ப தயாராக இல்லை.

இதற்கிடையில், ஜெகன்மோகன் ரெட்டி வரும் 11ம் தேதி அன்று டில்லியில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தவுள்ளார். கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டில் ஆந்திரா வஞ்சிக்கப்பட்டுள்ளதாக கூறி அவர் இந்த உண்ணாவிரதத்தை மேற்கொள்ள உள்ளார். அலமாட்டி அணையின் உயரத்தை தற்போதுள்ள 519 அடியிலிருந்து 524 அடியாக உயர்த்தி கொள்ள அனுமதித்துள்ளது தவறு. இதன்மூலம் 330 டி.எம்.சி., தண்ணீரை கர்நாடகா வைத்து கொள்ளும். காவிரியில் எப்படி நினைத்தபோது மட்டுமே தண்ணீரை கர்நாடகா திறந்துவிடுகிறதோ, அதேபோல கிருஷ்ணாவிலும் தண்ணீர் திறந்துவிட வாய்ப்புள்ளது. காவிரியைப் போல கிருஷ்ணாவை ஆக்கிவிட்டனர் என்று குற்றம் சாட்டி ஜெகன் தனது ஆதரவாளர்களுடன் இந்த உண்ணாவிரதத்தை மேற்கொள்ள உள்ளார்.ஏற்கனவே ஒடர்ப்பு யாத்திரையை ஜெகன் இடைவிடாது மேற்கொண்டு வருகிறார். அவர் செல்லும் இடமெல்லாம் கூட்டம் அலை மோதுகிறது. இது காங்கிரசுக்கு பெரும் கலக்கத்தை கொடுத்துள்ளது. தற்போதைய முதல்வர் கிரண்ரெட்டியோ அல்லது முந்தைய முதல்வர் ரோசய்யாவோ ஜெகனை சமாளிக்க முடியாது என்றே காங்கிரஸ் கருதுகிறது.

இந்த சூழ்நிலையில், தெலுங்கானா விவகாரமும் பெரிதாக வெடித்தால் நிச்சயம் நிலைமை தங்கள் கையை மீறிப்போகவே அதிக வாய்ப்பு உள்ளதாக காங்கிரஸ் அச்சம் கொண்டுள்ளது. மொத்தம் 294 எம்.எல்.ஏ.,க்கள் கொண்ட ஆந்திராவில், காங்கிரசுக்கு 156 பேர் இருந்தாலும், ஜெகன்மோகன் ரெட்டியின் ஆதரவாளர்கள் 15 முதல் 20 பேர் வரை உள்ளனர். ஜெகனுக்கு ஆதரவாக எப்போது வேண்டுமானாலும் இவர்கள் காங்கிரசைவிட்டு பிரிய வாய்ப்புள்ளது. இருப்பினும், சிரஞ்சீவி கட்சியின் பிரஜ்ஜா ராஜ்யத்தின் 16 எம்.எல்.ஏ.,க்களை வைத்து கொண்டுதான் காங்கிரஸ் நம்பிக்கையுடன் அங்கு ஆட்சியில் உள்ளது.

இந்நிலையில், தெலுங்கானாவை சேர்ந்த 12 காங்கிரஸ் எம்.பி.,க்கள் பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசினர். அப்போது தெலுங்கானாவை பிரித்து கொடுக்க வழியைப் பாருங்கள் என்றும், இல்லையெனில் நாங்கள் சொந்த ஊருக்கு போக முடியாது என்றும், ஒருவேளை அது முடியாது போனால் பதவியை நாங்களே ராஜினாமா செய்துவிட்டு போகிறோம் என்று அனைத்து எம்.பி.,க்களும் கூறினர்.

முக்கிய எதிர்க்கட்சியான தெலுங்குதேசமும் கடும் குழப்பத்தில் உள்ளது. அந்த கட்சியின் எம்.எல்.ஏ., ஒருவர் ராஜினாமா செய்து விட்டார். இன்னொருவரும் ராஜினாமா செய்யப்போவதாக மிரட்டல் விடுத்து வருகிறார். இதனால், ஆந்திரா மாநில அரசியலே மொத்தத்தில் குழப்பம் இருந்து வருகிறது. இந்த குழப்பத்திற்கு ஒட்டுமொத்தமாக முடிவு கட்ட, அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த அதிக வாய்ப்புகள் இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய படையை வாபஸ் பெற கோரிக்கை :"உஸ்மானியா பல்கலைக்கழக வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள துணை ராணுவப் படையினரை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்' என, ஆந்திர மாநில அரசை தெலுங்கு தேசம் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் சிலர் நேற்று முதல்வர் கிரண்குமார் ரெட்டியை சந்தித்துப் பேசினர். அப்போது, "உஸ்மானியா பல்கலைக்கழக வளாகத்தில், துணை ராணுவப் படையினரை நிறுத்தி வைத்திருப்பது பதட்டத்தை மேலும் அதிகரிக்கும். எனவே, படையினரை வாபஸ் பெற வேண்டும்' என கோரினர்.


0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts