background img

புதிய வரவு

முதல்வர் கருணாநிதிக்கு எதிராக பொது வேட்பாளராக களமிறக்கப்படுகிறார் சீமான்

சென்னை: நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமானை, முதல்வர் கருணாநிதிக்கு எதிராக பொது வேட்பாளராக களம் இறக்குகிறது அதிமுக.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தனக்குச் சாதகமான முறையில் அனைத்தையும் மாற்றும் வேலையில் படு மும்முரமாக, கில்லாடித்தனமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். அத்தனை பேரும் கூட்டணி குறித்து கவலையில் உள்ள நிலையில் இவர், கூட்டணியைத் தாண்டி வேறு பல முக்கிய விஷயங்களையும் கவனத்தில் கொண்டு காய் நகர்த்தி வருகிறார்.

ஜாதி ரீதியாக, உணர்வு ரீதியாக திமுகவுக்கு எதிராக உள்ளவற்றை ஒருங்கிணைத்து தன் பக்கம் திருப்ப முயன்று வருகிறார் ஜெயலலிதா. அதில் ஒன்றுதான் சீமானை அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக திருப்பியது.

ஈழத்தில் நடந்த மகா அக்கிரமமான போர், ஈழப் போர் கோரமாக முடிந்த அவலம் உள்ளிட்டவற்றில் முதல்வர் கருணாநிதிக்கு எதிராக கடும் அதிருப்தி நிலவி வருவதை உணர்ந்த ஜெயலலிதா இப்போது அத்தனையையும் ஒரே வடிகாலாக்கி, அதிமுக பக்கம் திருப்ப முனைந்துள்ளார் சீமான் மூலமாக.

இந்தப் பணியை ஜெயலலிதாவுக்காக வைகோ செய்து முடித்துள்ளார். வருகிற சட்டசபைத் தேர்தலில் முதல்வர் கருணாநிதிக்கு எதிராக சீமானை பொது வேட்பாளராக்கப் போகிறது அதிமுக. நாம் தமிழர் கட்சி சார்பாகவே இத்தேர்தலில் போட்டியிடப் போகிறார் சீமான். அவருக்கு அதிமுக, மதிமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட அதிமுக கூட்டணி ஆதரவு அளிக்கும்.

இந்தத் திட்டத்திற்கு சீமானும் சம்மதித்து விட்டார். இதை நேற்று வைகோவை சந்தித்துப் பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் சீமானே தெரிவித்தார். தான் தேர்தலில் முதல்வரை எதிர்த்துப் போட்டியிடப் போவதாக அவரே அறிவித்தார்.

இதற்கிடையே முதல்வருக்கு எதிராக சீமானை நிறுத்த வேண்டும் என்ற கருத்து நேற்று பகிரங்கமாகவே ஒரு அரங்கில் வைக்கப்பட்டது. தமிழறிஞரும், ஈழ விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் கேவலமான செயல்பாடுகளை பகிரங்கமாக கண்டித்து அக்கட்சியை தூக்கி எறிந்து விட்டு வெளியேறியவருமான தமிழருவி மணியன் எழுதிய நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.

இந்த விழாவின்போது முதல்வருக்கு எதிராக சீமானை பொது வேட்பாளராக்க வேண்டும் என்ற கருத்து பலமாக வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பழ. நெடுமாறன், நடிகர்கள் நாசர், மணிவண்ணன் மற்றும் சீமான் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். மதிமுக சார்பில் மல்லை சத்யாகலந்து கொண்டார். திமுகவுடன் நெருங்கி வந்து கொண்டிருப்பதால் ஈழ விவகாரம் குறித்து இப்போதெல்லாம் ஒதுங்கிப் போய்க் கொண்டிருக்கும் பாமக சார்பிலும் ஒருவர் கலந்து கொண்டார். அவர் எம்.எல்.ஏ. வேலுச்சாமி.

நிகழ்ச்சியில் பேசிய அனைவரும் (பாமகவைத் தவிர) திமுக, காங்கிரஸ் கூட்டணிய வேரறுக்க வேண்டும், வீழ்த்த வேண்டும் என்று ஆவேசமாகப் பேசினர். ஒருவர் பாமகவைக் கண்டித்துப் பேசியதால் சலசலப்பும் ஏற்பட்டது. 

இலங்கை இன அழிப்புப்போர் குறித்த 300 புகைப்படங்களுடன் கூடிய அரிய தொகுப்பாக என்ன செய்ய வேண்டும் இதற்காக என்ற இந்த நூல் 
உருவாகியுள்ளது.

மொத்தத்தில் தமிழ் ஈழ ஆதரவாளர்களின் கோபத்தையும், குமுறலையும் சீமான் பக்கம் திருப்பி அவரை வெற்றி பெற வைத்து முதல்வர் கருணாநிதியை வீழ்த்த அதிமுக வகுத்துள்ள வியூகம் தெளிவாகியுள்ளது

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts