புதுடில்லி : ""அரசியலில் கிரிமினல்கள் பங்கேற்கும் பிரச்னை குறித்து அரசும், பார்லிமென்டும் மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும். கொலை, கற்பழிப்பு மற்றும் பணம் பறித்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்கள், தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி கூறியுள்ளார்.
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:அரசியலில் கிரிமினல்கள் பங்கேற்பது அதிகரித்து வருகிறது. தேர்தல் முறையில் இது மோசமான ஒன்று. ஜனநாயகத்தில் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும், தேர்தலின் தரத்தை மேம்படுத்தவும் அரசியல் கிரிமினல் மயமாகும் பிரச்னை குறித்து, பார்லிமென்டும், அரசும் மறு ஆய்வு செய்ய வேண்டும். கொலை, கற்பழிப்பு மற்றும் பணம் பறித்தல் போன்ற மோசமான குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டோர், தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும். இந்த நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்.மேலும், மோசமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அதில் தண்டிக்கப்பட்ட எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்களையும் உடனடியாக தகுதி நீக்கம் செய்ய வேண்டும். பொது நலன் கருதி இந்தத் தடையை விதிக்க வேண்டியது அவசியம்.
தற்போதுள்ள சட்ட விதிகளின்படி, ஒருவர் கோர்ட்டால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டால் மட்டுமே, அவர் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழக்கிறார். ஒருவருக்கு எதிராக வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கும் போது, அவர் சிறையில் இருந்தால் கூட தேர்தலில் போட்டியிடலாம். ஓட்டு போட தகுதியில்லை என்றாலும், தேர்தலில் போட்டியிட அவருக்கு தகுதியுண்டு.கொலை, கற்பழிப்பு, பணம் பறித்தல் போன்ற மோசமான கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டோரை, அதாவது ஐந்து ஆண்டுகளுக்கு மேலான தண்டனை பெறக்கூடிய குற்றங்களைச் செய்தோரை, அவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை கோர்ட்டில் நிலுவையில் இருந்தாலும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்.இதை செய்யும்படி, மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்தது. மேலும், தேர்தலுக்கு ஆறு மாதத்திற்கு முன்னதாக, இப்படிப்பட்ட குற்ற வழக்குகளைச் சந்தித்தோருக்கு தடை விதிக்கலாம் என்றும் தெரிவித்தது.
ஆனால், இது பற்றி ஆய்வு செய்த பார்லிமென்ட் கமிட்டி, கமிஷனின் யோசனையை ஏற்கவில்லை. குற்ற வழக்குகளில் ஒருவர் தண்டிக்கப்படும் வரை அவர் அப்பாவியே. அரசியல் ரீதியான போட்டி காரணமாகவும், வேறு பல காரணங்களாலும் பலர் பொய்யான வழக்குகளைச் சந்திக்க நேரிடுகிறது. அதனால், இந்த யோசனையை ஏற்க முடியாது என்று கூறிவிட்டது.ஒருவர் குற்றவாளி என, கோர்ட்டால் அறிவிக்கப்படும் வரை அவர் அப்பாவியே எனக் கூறி தேர்தலில் போட்டியிட அனுமதிப்பது சரியல்ல. ஏனெனில், குற்றம் சாட்டப்பட்டு விட்டாலே, ஒருவர் சுதந்திரமாக நடமாடுவதற்கும், குடும்பத்துடன் சுதந்திரமாக வாழ்வதற்கும், சுதந்திரமாக தனது தொழிலை செய்வதற்கும், சுதந்திரமாக பேசுவதற்கும் மற்றும் கருத்து தெரிவிப்பதற்கும் தடை விதிக்கப்படுகிறது.இந்த அடிப்படை உரிமைகளை எல்லாம் இழந்தவரை, தேர்தலில் போட்டியிட அனுமதிப்பது மட்டும் எப்படி சரியாக இருக்கும்.
பாரபட்ச நடவடிக்கை: எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ., பதவியில் இருக்கும் போது, சிலர் தாங்கள் செய்த குற்றங்களுக்காக இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றும், பதவியில் தொடர்கின்றனர்; அந்தப் பதவிக்குரிய சலுகைகளையும் அனுபவிக்கின்றனர். அவர்களை யாரும் தகுதி நீக்கம் செய்வதில்லை.அதே நேரத்தில், சாதாரண நபர் ஒருவர் கோர்ட்டால் தண்டிக்கப்பட்டு விட்டால், அவர் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படுவதில்லை. இது பாரபட்சமான நடவடிக்கை. இதையெல்லாம் சரி செய்ய வேண்டும்.எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ., பதவியில் இருப்போர், கோர்ட்டால் தண்டிக்கப்பட்டு விட்டால், அவர்கள் தற்போதைய சபையில் மட்டுமே பதவியில் தொடர முடியும். அப்பீல் மனு நிலுவையில் இருந்தாலும், எதிர் காலத்தில் தேர்தலில் போட்டியிட முடியாது என, சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது வரவேற்கத்தக்கது.
கடந்த லோக்சபாவில் இடம் பெற்ற எம்.பி.,க்களில், கிரிமினல் வழக்குகளில் சிக்கியோர் 128 பேர். இவர்களில் 58 பேர், மோசமான குற்றச்சாட்டுகளை சந்தித்தவர்கள். கிரிமினல் வழக்குகளை சந்திக்கும் எம்.பி.,க்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இது கவலை தரும் அம்சம்.பீகார் சட்டசபைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில், வெற்றி பெற்ற 243 எம்.எல்.ஏ.,க்களில், 141 பேர் (59 சதவீதம்) கிரிமினல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்கள். இவர்களில் 85 பேர், கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடையவர்கள். கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய யாரையும், வரும் 2014 சட்டசபை தேர்தலில் நிறுத்த மாட்டோம் என பகுஜன் சமாஜ் கட்சி அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. இது ஒரு நல்ல முன்னுதாரணம். அனைத்து கட்சிகளும் இதை பின்பற்ற வேண்டும்.இவ்வாறு குரேஷி கூறினார்.
1,000 கட்சிகள் போலி : கோல்கட்டா: மேற்கு வங்கம் கோல்கட்டாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய குரேஷி கூறியதாவது:தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டாலே, கருத்துக் கணிப்புகள் வெளியிட தடை விதிக்க வேண்டும். ஓட்டுப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை ஏற்கனவே தேர்தல் கமிஷன் முறைப்படுத்தியுள்ளது.தேர்தல் கமிஷனில் பதிவு செய்துள்ள அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 1,200. இவற்றில் 75 முதல் 80 சதவீத கட்சிகள் எந்தத் தேர்தலிலும் போட்டியிடுவதில்லை. 150 கட்சிகள் மட்டுமே தீவிரமாகச் செயல்படுகின்றன. மற்றவற்றில் பெரும்பாலானவை போலி கட்சிகள். போலி அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்யும் அதிகாரத்தை தேர்தல் கமிஷனுக்கு வழங்க வேண்டும்.தேர்தலுக்கு அரசே நிதியுதவி அளிக்கும் திட்டம் சரியானதல்ல. அப்படி செய்தால், அரசியல் கட்சிகளுக்கு நிறைய பணம் கிடைக்கும்; அந்தப் பணத்தை தவறாகப் பயன்படுத்தவும் வாய்ப்பு உண்டு.தலைமை தேர்தல் கமிஷனருக்கு இணையான அந்தஸ்தை, மற்ற இரண்டு தேர்தல் கமிஷனர்களுக்கும் வழங்க வேண்டும். அப்போது தான், தேர்தல் கமிஷனின் சுதந்திரம் பேணி காக்கப்படும்.இவ்வாறு குரேஷி கூறினார்.
0 comments :
Post a Comment