தி.மு.க. & காங்கிரஸ் இடையே கூட்டணி வலுவாக உள்ளது : பிரதமர் மன்மோகன்சிங்
சென்னை : ‘திமுக & காங்கிரஸ் இடையேயான உறவு எப்போதும் போல வலுவாக உள்ளது’ என்று சென்னையில் பிரதமர் மன்மோகன்சிங் கூறினார். பிரதமர் மன்மோகன் சிங் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தார். கவர்னர் மாளிகையில் தங்கியிருந்த அவரை முதல்வர் கருணாநிதி சந்தித்து பேசுவதாக இருந்தது. அன்றைய தினம் இரவு கவிஞர் வைரமுத்து புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் முதல்வர் நீண்ட நேரம் பங்கேற்றதால் விழா மேடையில் போடப்பட்டு இருந்த பிரகாசமான மின் விளக்குகளால் முதல்வர் கண்ணில் நீர் வடிந்து லேசான பாதிப்பு ஏற்பட்டது. அதனால் முதல்வரால் பிரதமரை அன்றைய தினம் திட்டமிட்டவாறு இரவு சந்திக்க முடியாமல் போனது. பிரதமரை முதல்வர் கருணாநிதி நேற்று காலை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டது. நேற்று காலையில் முதல்வர் கருணாநிதி அகர்வால் கண் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். பின்னர் முதல்வர் கருணாநிதி காலை 8.30 மணிக்கு கவர்னர் மாளிகை சென்றார். தலைமை செயலர் மாலதி, டி.ஆர்.பாலு எம்பி உடன் இருந்தனர். பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதியை வரவேற்று அழைத்துச் சென்றார். இருவரும் அரை மணி நேரம் பேசினர். சந்திப்பு முடிந்ததும் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் முதல்வர் கருணாநிதி அளித்த பதில்களும் வருமாறு: பிரதமரிடம் என்ன பேசினீர்கள்? தமிழகத்தில் ஏற்பட்ட பெரு மழை, வெள்ளம் பற்றி பேசினோம். மீண்டும் மழை வரக்கூடும் என்று சொல்லப்படுகிறது. தமிழகத்தில் நிவாரண பணிகளை மேற்கொண்டு நிவாரண நிதியை நாங்கள் வழங்கிக் கொண்டு இருக்கிறோம். மத்திய அரசு இதற்கு விரைவில் நிதி உதவி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். நேற்று பிரதமரை பார்க்க நீங்கள் செல்லாததால் நகரில் பெரிய பரபரப்பு ஏற்பட்டதே?நேற்று நான் ஏற்கனவே ஒப்புக் கொண்ட ஒரு நிகழ்ச்சி இருந்தது. கவிஞர் வைரமுத்து நூல் வெளியீட்டு நிகழ்ச்சி. அதில் பலர் பேச வேண்டியிருந்தது. அதனால் தாமதமாகி விட்டது. சந்திக்க முடியவில்லை. இன்று சந்தித்தேன். பிரதமர் அடையாறு பூங்காவை திறந்து வைக்காதது வருத்தமாக இருக்கிறதா? வருத்தம் ஒன்றும் கிடையாது. பொருத்தமான காரணங்களைத் தானே சொல்லியிருக்கிறார்கள். காங்கிரஸ் & தி.மு.க. உறவு எப்படி இருக்கிறது? எனக்கும் உங்களுக்கும் இருக்கிற அளவு இருக்கிறது. இவ்வாறு கருணாநிதி கூறினார். அதன்பின், பிரதமர் மன்மோகன் சிங் நேற்று சென்னை அருகே நடந்த இந்திய அறிவியல் மாநாட்டில் கலந்து கொண்டார். பின் அவர் நிருபர்களிடம் முதல்வர் கருணாநிதியுடன் நடந்த சந்திப்பு பற்றி கூறும் போது, தமிழகத்திற்கு வெள்ள நிவாரணம் வழங்குவது, அடையாறு பூங்காவிற்கு சுற்றுசூழல் அமைச்சக அனுமதி மற்றும் கூட்டணி பற்றி முதல்வர் பேசியதாக குறிப்பிட்டார். தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி பற்றி கேட்டதற்கு இரு கட்சிகளுக்கிடையே வலுவான உறவு எப்போதும்போல் தொடருகிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
0 comments :
Post a Comment