வேலைவாய்ப்பு பதிவு: அரசு எச்சரிக்கை
வேலைவாய்ப்பு பதிவின் போது அளிக்கப்படும் தகவல்கள் தவறானவை எனத் தெரியவந்தால் சம்பந்தப்பட்டவரின் பதிவு மூப்பு ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இணையதளம் வழியாக கம்ப்யூட்டர் மூலம் வேலைவாய்ப்புப் பதிவுக்கென மனுதாரர்கள் அளிக்கும் தகவல்களின் உண்மைத் தன்மையின் அடிப்படையில் பதிவு மேற்கொள்ளப்படும்.
அவ்வாறு அளிக்கப்படும் தகவல்களுக்கு பதிவுதாரர்களே பொறுப்பாவர். கல்வித் தகுதியைப் பதிவு செய்யும் நேரங்களில், குடும்ப அட்டை எண், கல்விச் சான்றின் மதிப்பெண் பட்டியல், பட்டயச் சான்றிதழ் எண் அல்லது பல்கலைக்கழகச் சான்றில் உள்ள பதிவு எண், தேதி, யாரால் வழங்கப்பட்டது போன்ற விவரங்களை கம்ப்யூட்டரில் கட்டாயமாக அளிக்க வேண்டும். பதிவுதாரர்களால் மேற்கொள்ளப்படும் கூடுதல் கல்வித் தகுதிக்கும் இதே நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.
பதிவுதாரர்களால் அளிக்கப்படும் கல்வித் தகுதிகள், கூடுதல் கல்வித் தகுதிகள் பற்றிய விவரங்கள் சரியானவை தான் என்பதற்குப் பதிவுதாரரே பொறுப்பு. பின்னாளில் அந்தத் தகவல்கள் தவறானவை எனத் தெரிய வரும்போது சம்பந்தப்பட்டவரின் பதிவு மூப்பு ரத்து செய்யப்படும்.
பதிவுதாரர்களின் பெயர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பெறப்படும் காலிப் பணியிட அறிவிப்புகளுக்கு பதிவு மூப்புக்கு உட்பட்டு பரிந்துரைக்கப்பட வேண்டும். அவ்வாறு பரிந்துரைக்கப்படுவதால் அவர்களின் சான்றிதழ்கள் அனைத்தும் வேலை அளிப்போரால் பணிநியமனத்துக்கு முன்பே சரிபார்க்கப்படும்.
அவற்றின் உண்மைத்தன்மை உறுதி செய்யப்பட்ட பிறகு அவர்களுக்கு பணிநியமனம் வழங்க வேண்டும். இணையதளம் வாயிலாகப் பதிவு செய்யப்படும் போது சான்றிதழ்களை ஏற்று அந்தச் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை, பணி நியமனம் செய்யும் போது வேலை அளிப்பவரால் உறுதி செய்யப்படும் என்று அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment