background img

புதிய வரவு

இலவசங்களை லஞ்சமாக கொடுக்கிறார் முதல்வர்: ஜெயலலிதா

சென்னை : "தமிழகத்தில் உள்ள ஏழை மக்கள் ஏழைகளாகவே இருக்க வேண்டும். அப்போது தான் சலுகைகளையும், இலவசங்களையும் லஞ்சமாக கொடுத்து, ஏழைகளின் ஓட்டுகளை பெற முடியும் என்று முதல்வர் கருணாநிதி நினைக்கிறார்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை: ஏழை மக்கள் இருக்கிற வரை தமிழகத்தில் இலவசங்கள் தொடரும் என, புத்தாண்டு தினத்தன்று முதல்வர் கருணாநிதி பேசி இருக்கிறார். வறுமையை ஒழிப்பதற்கு தன்னிடம் எந்த திட்டமும் இல்லை என்பதையும், ஏழை மக்களை பற்றிய அடிப்படை கவலை கூட தனக்கு இல்லை என்பதையும் தன்னையே அறியாமல் ஒப்புக் கொண்டிருக்கிறார் கருணாநிதி.இன்னும் சொல்லப்போனால், தமிழகத்தில் உள்ள ஏழை மக்கள் ஏழைகளாகவே இருக்க வேண்டும் என்று தான் கருணாநிதி விரும்புகிறார். அப்போது தான் சலுகைகளையும், இலவசங்களையும் லஞ்சமாக கொடுத்து, ஏழை மக்களின் ஓட்டுக்களைப் பெற முடியும் என நினைக்கிறார்.

மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் சீனாவை அடிபணிய வைப்பதற்காகவும், அந்நாட்டு மக்களை பிரிட்டனில் அடிமைகளாக்க வேண்டும் என்பதற்காகவும், சீனர்களுக்கு போதை மருந்தை பிரிட்டிஷார் காட்டினர். இதன் விளைவாக பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து சீனர்கள் விடுதலை பெற நூற்றாண்டுகளாகியது. இதுபோன்ற மேலாதிக்கம் இந்த மாநிலத்தில் உள்ள ஏழை மக்கள் மீது நிரந்தரமாக நிலை நிறுத்தப்பட வேண்டும் என கருணாநிதி விரும்புகிறார்.பொது வினியோக திட்டத்தின் மூலம் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கிடைக்கின்ற அதே சமயத்தில், வெங்காயத்தின் விலை 90 ரூபாய். அனைத்து காய்கறிகளும் ஒரு கிலோ 50 ரூபாய்க்கு மேல் தான் விற்கப்படுகின்றன.

சாம்பார் வைப்பதற்கு பயன்படுத்தப்படும் பருப்பின் விலை ஒரு கிலோ 100 ரூபாய். சமையல் எண்ணெயின் விலை ஒரு கிலோ 100 ரூபாய்க்கு மேல்.சமையல் காஸ் அடுப்புகள் இலவசமாக தரப்படுகின்றன. ஆனால், ஒரு சமையல் காஸ் சிலிண்டரின் விலை 400 ரூபாய். காஸ் சிலிண்டர் பதிவு செய்யப்பட்டு 98 நாட்கள் வரை வினியோகம் செய்யப்படுவதில்லை.அந்த அளவுக்கு காஸ் பற்றாக்குறை நிலவுகிறது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆனால், பல மணி நேர மின்வெட்டு மூலம் பயனாளிகளுக்கு இந்த சலுகை பயனளிப்பதில்லை.கலர் "டிவி'க்கள் இலவசமாக தரப்படுகின்றன. ஆனால், கேபிள் இணைப்புகளுக்கு அதிக செலவாகிறது. இதன் மூலம் கருணாநிதி குடும்பத்திற்கு நிரந்தர வருமானம் உறுதி செய்யப்படுகிறது. திரைப்படத் துறையை கருணாநிதி குடும்பத்தினர் கபளீகரம் செய்து விட்டனர். தமிழகத்திலும், வெளிநாடுகளிலும் கல்லூரிகளையும், நட்சத்திர ஓட்டல்களையும் கருணாநிதி குடும்பத்தினர் வாங்கி குவித்து கொண்டிருக்கின்றனர்.

சட்ட விரோத மணல் கொள்ளை கருணாநிதி குடும்பத்தினரின் ஆதிக்கத்தில் தான் இயங்குகிறது. சட்ட விரோத கிரானைட் கொள்ளையும் இவர்கள் ஆதிக்கத்தில் நடைபெறுகிறது. கருணாநிதியின் குடும்ப வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் தான், தமிழகத்தில் செயல்படுத்தப்படும் ஒவ்வொரு திட்டமும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இவற்றிற்கு எல்லாம் மகுடம் வைத்தாற்போல் அமைந்தது தான் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல். இந்த பணத்தை வைத்தே தமிழகத்தை யாருமே நினைத்து பார்த்திருக்க முடியாத அளவுக்கு மேம்படுத்தியிருக்கலாம்.இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.


0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts