background img

புதிய வரவு

சென்னை சங்கமும் ஜல்லிக்கட்டும்

தாரை, தப்பட்டை, முரசு, கொம்பு முழங்க, புரவியாட்டம் (பொய்க்கால் குதிரை), கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம் என்று தமிழரின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் சென்னை சங்கமம் விழா இன்று சென்னையில் தொடங்குகிறது. 


தமிழ்நாட்டின் திருக்கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களில் மட்டுமே நாம் கண்டு களிக்கக்கூடிய திருவிழா கோலாகலங்கள் சென்னை வீதிகளில் உலா வரப்போகின்றன. இவையோடு தமிழரின் வீரத்தை பறைசாற்றும் சட்டைக்குச்சி, சிலம்பாட்டம், மடு என்று தமிழரின் வீர விளையாட்டுகளையும் ஒரு வார காலத்திற்கு சென்னையின் 12 இடங்களில் காண சென்னை சங்கமம் விழாவை ஏற்பாடு செய்துள்ளது தமிழ் மையம்.

தமிழரின் வீர விளையாட்டுகளான அடி முறை, குத்து வரிசை, கரத்தாண்டவம் (கராத்தேயின் அப்பன்), வர்மக் கலை ஆகியனவும், இன்றைக்கு பரத நாட்டியம் என்று மறுபெயர் இடப்பட்டுள்ள சதிராட்டமும் வளர வாய்ப்பின்றி, கற்க சீடர்கள் இன்றி வெளியில் வர முடியாமல் முடங்கிக் கிடக்கின்றன. தமிழரின் வீர விளையாட்டான அடி முறை, குத்து வரிசை, கரத்தாண்டவம் ஆகியன இந்த மண்ணை விட்டு சீனத்திற்குச் சென்று சீனக் குத்து என்றும், அரங்த்தா கென் என்றும் ஆகி, அதுவே ஜப்பானின் ஒக்கினாவிற்கு செல்லும் போது கராத்தே என்று பெயரிடப்பட்டு இன்று உலகில் அந்தக் கலை தமிழனின் வேர் பற்றிக் கூறாமலேயே பயிற்றுவிக்கப்படுகிறது. இதனை அங்கு கிராண்ட் மாஸ்டர்களாக இருப்போர் அறிந்துள்ளனர், ஆனால் வெளியில் சொல்வதில்லை. 

இப்படி தமிழரால் பல்லாயிரம் ஆண்டுகளாக வளர்க்கப்பட்டு, அவர்களின் வீரம் சொரிந்த வாழ்வுடன் ஒன்றாக்கப்பட்டு, அது போர்க் காலங்களில் போர்க் கலையாகவும், விழாக் காலங்களில் அவன் ஆடும் கரகாட்டம் உள்ளிட்ட நடனங்களில் மறைந்து உரைந்தும் வாழ்ந்து வந்தது. புரிந்தவர்களுக்குத் தெரியும் கரகாட்டக் கலை என்பது வலிமையான கை, கால்களை உருவாக்கும் போர் பயிற்சியே என்பது. ஆனால் இதையெல்லாம் புரியாத ஒரிரு நூற்றாண்டுகளில் அவைகளை இதுதான் என்று விளக்கிச் சொல்லவும் ஆளின்றி, கற்றுக் கொடுக்கவும் ஆசான் இன்றி, கேட்டுப் பெறவும் சீடனின்றி மாண்டு போன நிலையில் முடங்கிக் கிடக்கின்றன. ஏதோ சிலம்பம் மட்டும் குறவஞ்சி, கள்ளப்போத்து, துலுக்கானா என்று தமிழ்நாட்டில் பல்வேறு வித்தைகளாக வாழ்கின்றதே என்ற ஆறுதல் மட்டுமே விஞ்சுகிறது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts