புத்தாண்டு பொதுப்பலன்
வணக்கம். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். எண் ஜோதிடப்படி 2011ம் ஆண்டு, மாயாஜால நிழல்கிரகமான ராகுவின் ஆதிக்க எண்ணான 4ல் அமைவதோடு, வருடத் துவக்கம் சுக்கிரனின் 6ம் எண்ணில் (1+1+2011=6) அமைவதால், சினிமா துறை பல சாதனைகளை புரியும். கலைத்துறையினர் அரசியலில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள்; தங்கள் கருத்துகளை வெளியிடுவார்கள். வாகன உற்பத்தி அதிகரிக்கும். கம்ப்யூட்டர், கார், டி.வி., ஃபிரிட்ஜ், ஏ.சி மற்றும் சமையலறை சாதனங்களின் விலை குறையும். காய்கறி விலை குறையும். நகரத்தைக் காட்டிலும் நகரத்தை ஒட்டியிருக்கும் பகுதிகள் நவீனமாகும். விளைநிலங்கள் வீட்டு மனையாவதைத் தடுக்க சட்டம் வரும். கணவரை இழந்த மற்றும் விவாகரத்து பெற்ற பெண்கள் சமூகத்தில் சாதித்துக் காட்டுவார்கள்; பெரிய பதவியிலும் அமர்வார்கள். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, நிலக்கரி, இரும்பு போன்ற கனிம, கரிம பொருட்களின் விலை கட்டுக்கடங்காமல் உயரும். பங்குச் சந்தை வருடத்தின் மத்தியப் பகுதியிலிருந்து சூடுபிடிக்கும். தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உயரும். குரு பகவான் 7.5.2011 வரை மீன ராசியிலும், 8.5.2011 முதல் வருடம் முடியும் வரையில் மேஷ ராசியிலும் அமர்வதால் கல்வித்துறை பாதிக்கும். அரசாங்கத்திற்கும், தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை அதிகரிக்கும். முருகனின் சம்ஹார நட்சத்திரமான விசாகத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் நாட்டில் பரபரப்பான சம்பவங்கள் நிகழும். தவறு செய்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள். பட்டணத்தில் பதவியில் இருப்பவர்களைவிட, பட்டி தொட்டியில் இருப்பவர்களின் செல்வாக்கு அதிகரிக்கும். கால புருஷனின் எட்டாவது ராசியான விருச்சிகத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் சாலை விபத்துகளால் உயிரிழப்பு அதிகரிக்கும். ரத்த அணுக்களை பாதிக்கும் புதிய கிருமிகள் தோன்றும். நில நடுக்கம், காட்டுத் தீ, அதிக வெப்பத்தால் பனிமலை உருகுதல், பருவம் தவறிய மழை போன்ற இயற்கை சீற்றங்களால் விவசாயம் பாதிக்கும். இந்த ஆண்டு முழுவதும் சுக்கிரன் வக்கிரம் இல்லாமல் இருப்பதால், மழை மிகுந்திருக்கும். மண் வளம் பெருகும். கலைத்துறையினர் சாதிப்பார்கள். தமிழில் யதார்த்தமான கதையம்சம் உள்ள திரைப்படங்கள் வெளியாகும். தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள் கிடைக்கும். மொசைக், டைல்ஸ், கிரானைட், மார்பிள் விலை குறையும். புதன் அவ்வப்போது வக்கிரமாவதால் தொலைத் தொடர்புத் துறை நிறுவனங்கள் பாதிப்படையும். ஆனால் மொபைல் போன் சேவையில் முன்னேற்றம் உண்டாகும். கம்ப்யூட்டர், லேப்டாப் விலை குறையும். அண்டவெளியில் அதிக ஆற்றல் வாய்ந்த நட்சத்திர பால்வெளிகள் கண்டறியப்படும். இந்தியாவிற்கு அண்டை நாடுகளால் அச்சுறுத்தல்கள் அதிகரிக்கும். வருட மத்தியிலிருந்து அமெரிக்காவின் கை ஓங்கும். ஆடை உற்பத்தி அதிகரிக்கும். இரும்புக் கம்பி விலை உயரும். 6.9.2011 முதல் 16.12.2011 முடிய குரு வக்கிரமாவதால் இக்காலக்கட்டத்தில் ஹவாலா மோசடி, கள்ள நோட்டுப் புழக்கம் மற்றும் நாட்டுப் பாதுகாப்புக்கு சவாலான சம்பவங்கள் நடக்கும். சனி வக்கிரமடைவதால் 22.1.2011 முதல் 7.6.2011 வரை விமான விபத்துகள், சுரங்க விபத்துகள், சாலை விபத்துகள் அதிகரிக்கும். அந்நிய தீய சக்திகள் நாட்டின் மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் காரியங்களில் ஈடுபடும். நீதிமன்றங்கள் ஜனநாயகத்தை நிலை நாட்டும் வண்ணம் ஆணைகளை பிறப்பிக்கும். குழந்தை தொழிலாளிகள் எண்ணிக்கை குறையும். செக்ஸ் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே அதிகரிக்கும். கோயில் சொத்துகளை நூதன முறையில் திருடும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். புலி, யானையைப் பாதுகாக்க புது சட்டம் வரும். இளைஞர்கள் அரசு வேலை மற்றும் ஆராய்ச்சிக் கல்வியில் ஆர்வம் காட்டுவார்கள். செவ்வாயுடன் ராகு நிற்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் பாலியல் பலாத்காரம், சொத்து, சைபர் கிரைம், முன் விரோதம் சம்பந்தப்பட்ட வழக்குகள் அதிகரிக்கும். உணவு பயிர்களை அதிசய கிருமிகள் தாக்கும். சகோதர ஒற்றுமை பாதிக்கும். பூமி விலை உயரும். ஆனால், கட்டிட விலை குறையும். இயற்கையைப் பாதுகாக்க சுற்றுச்சூழல் நிபுணர்கள் ஆர்வம் காட்டுவார்கள். நீதிபதிகள் நீர்நிலைகளை காக்க அதிரடி ஆணை பிறப்பிப்பார்கள். சட்டத்துக்கு புறம்பாகக் கட்டப்பட்ட கட்டிடங்கள் அகற்றப்படும். ராணுவத்தில் நவீன ஏவுகணைகள் சேர்க்கப்படும். இந்திய பாதுகாப்பு ரகசியங்கள் கசியும். ராணுவத்தில் பெரிய பொறுப்பில் உள்ள அதிகாரிகள் மாற்றப்படுவார்கள். பல ஆயிரம் கிலோமீட்டர் வான்வெளி மற்றும் நீருக்கடியில் சென்று தாக்கக்கூடிய போர் தளவாடங்களை இந்தியா தயாரிக்கும். சீனாவுடன் ஒருபக்கம் நட்பும், மறுபக்கம் பகைமையும் உருவாகும். இந்திய சந்தையில் சீனப் பொருட்களின் ஆதிக்கம் அதிகரிக்கும். 15.1.2011 14.3.2011, 24.3.2011 17.4.2011, 16.5.2011 15.6.2011, 24.7.2011 10.9.2011, 18.9.2011 3.11.2011, 17.11.2011 16.12.2011 ஆகிய காலகட்டங்களில் இயற்கைச் சீற்றங்கள், அரசியல் திருப்பங்கள் நிகழும். வருடம் பிறக்கும்போது சனி பகவான் வலுத்திருப்பதால் அயல்நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் போட்டி போட்டுக் கொண்டு முதலீடுகள் செய்யும். புதிய தொழிற்சாலைகள் உருவாகும். வேலையில்லா திண்டாட்டம் குறையும். தொழிலாளர்களின் தினக்கூலி உயரும். சாஃப்ட்வேர் துறை சூடு பிடிக்கும். வங்கிகளின் நிதிநிலை திருப்திகரமாக இருக்கும். விளையாட்டுத் துறையில் இந்தியா சாதிக்கும். கிரிக்கெட்டில் இந்தியா கோப்பை வெல்லும். புதிய நெல் ரகங்கள் மற்றும் உணவு தானியங்களை விஞ்ஞானிகள் கண்டறிவார்கள். கல்வித்துறையில் மாணவர்களின் பாடச்சுமை குறையும். அரசுப் பொதுத் தேர்வுக்கான முக்கியத்துவம் குறையும். வினாத்தாள்கள் கசிய வாய்ப்பிருக்கிறது. சிறுபான்மை மக்கள் கல்வியில் முன்னேறுவார்கள். மேலும் சில சலுகைகளும் பெறுவார்கள். மருத்துவத்துறையில் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த நவீன மருந்துகள் நடைமுறைக்கு வரும். எய்ட்ஸ் மற்றும் புற்றுநோயை குணப்படுத்த மேற்கொள்ளப்படும் புதிய ஆய்வுகள் வெற்றியடையும். வழிபாட்டு தலங்கள் அதிகரிக்கும். இந்தப் புத்தாண்டு மக்களிடையே போராட்ட குணத்தையும், எதிர்கேள்வி கேட்கும் பக்குவத்தையும் தருவதுடன் சுக போகங்களையும் தருவதாக அமையும். பரிகாரம்: ஆசை கிரகமான ராகு மற்றும் அனுபவிக்கத் தூண்டும் கிரகமான சுக்கிரனின் ஆதிக்கத்தில் இந்தாண்டு பிறப்பதால் அயல்நாட்டுப் பழக்கவழக்கங்களுக்கும், ஆடம்பரத்துக்கும் அடிமையாகாமல் பாரம்பரிய உணவு மற்றும் பழக்க வழக்கங்களை பின்பற்றுவதையே சிறந்த பரிகாரமாகச் சொல்ல முடியும். எதிலும் வெற்றி கிட்ட, இந்த வருடம் முழுவதும் லட்சுமி நரசிம்மரை வணங்குங்கள்.
0 comments :
Post a Comment