background img

புதிய வரவு

ஆராய்ச்சிகளுக்கென 14 புதுமைப் பல்கலைக்கழகங்கள்: கபில் சிபல்


சென்னை, ஜன.3: ஆராய்ச்சியிலும் கல்வியிலும் கவனம் செலுத்த 14 புதுமைப் பல்கலைக்கழகங்கள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் அறிவித்தார்.

சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் 98-வது இந்திய அறிவியல் மாநாடு திங்கள்கிழமை தொடங்கியது. மாநாட்டுத் தொடக்க விழாவில் அவர் பேசியது:

ஆராய்ச்சி மற்றும் கல்விக்காக பொதுத்துறையில் உள்ள நவரத்தின நிறுவனங்களைப் போன்று பல்கலைக்கழகங்களையும் தத்தெடுக்கும் திட்டம் உள்ளது.

இந்தப் பல்கலைக்கழகங்களுக்கு நிதி உதவி செய்யப்படும். வெளிநாட்டிலிருந்து நிதி பெற அனுமதி அளிப்பதோடு, முழுமையான தன்னாட்சி வழங்கப்படும்.

பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சிகளுக்கு புத்துணர்வு அளிக்கும் நடவடிக்கைகளால், கடந்த ஆண்டு இந்தியப் பல்கலைக்கழகங்கள் அதிக அளவில் ஆராய்ச்சிக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளன.

நாடு முழுவதும் 14 புதுமைப் பல்கலைக்கழகங்களை தொடங்குவது குறித்து திட்டமிட்டு வருகிறோம். இந்தப் பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சி மற்றும் கல்வியில் புதிய சாதனைகளைப் படைக்கும். ஏழ்மை, பசி, நீர்ப் பிரச்னை ஆகியவற்றுக்குத் தீர்வு காண்பது குறித்து நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இவற்றில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்டும்.

இந்தப் பல்கலைக்கழகங்களின் நிர்வாகக் கட்டமைப்பில் மற்ற பல்கலைக்கழகங்களைவிட பெரிய மாற்றங்கள் இருக்கும் என்றார் கபில் சிபல்.

துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்: பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளை அதிக அளவில் உருவாக்கும் வேளையில், உயர் கல்வியின் தரமும் உயர்த்தப்பட வேண்டும். இந்தியாவில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற உயர் கல்வி நிறுவனங்களுக்கு இணையாக மாற்ற வேண்டும் என்றார்.

அமர்த்யா சென், ரத்தன் டாடா பங்கேற்கவில்லை

சென்னையில் திங்கள்கிழமை தொடங்கிய 98-வது இந்திய அறிவியல் மாநாட்டில் நோபல் விஞ்ஞானி அமர்த்யா சென், தொழிலதிபர் ரத்தன் டாடா ஆகியோர் மாநாட்டுத் தொடக்க விழாவில் பங்கேற்கவில்லை.

அறிவியல் மாநாட்டு தொடக்க விழாவில், ரத்தன் டாடாவுக்கு ஜவாஹர்லால் நேரு விருது வழங்கப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல், நோபல் விஞ்ஞானி அமர்த்யா சென்னுக்கு மாநாட்டுத் தலைவரின் தங்கப் பதக்கம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இருவரும் திங்கள்கிழமை நடைபெற்ற தொடக்க விழாவில் பங்கேற்கவில்லை.


0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts