background img

புதிய வரவு

தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கை அதிகரிப்பு : 2009ம் ஆண்டில் 1,060 விவசாயிகள் தற்கொலை

விவசாயிகளுக்காக மத்திய அரசு, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள விவசாய கடன்களை ரத்து செய்திருந்தது. ஆனாலும், நாடு முழுவதும் 2009ம் ஆண்டில் மட்டும், 17 ஆயிரத்து 175 விவசாயிகள் தற்கொலை செய்தனர். தமிழகத்தில் அதே ஆண்டில், 1,060 விவசாயிகள் தற்கொலை செய்தனர். அதேபோல தமிழகத்தில் 2009ம் ஆண்டில் மட்டும், 456 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்துள்ளது.


ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் ஆட்சியின் போது, விவசாயிகளுக்காக அவர்கள் வாங்கியிருந்த ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்பட்டது. கடன் தொல்லை காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருவதையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.மத்திய அரசின் தேசிய குற்றப்பதிவு ஆணையம் சார்பில், நாடு முழுவதும் நடக்கும் குற்ற சம்பவங்கள் அனைத்தும் தயார் செய்யப்படுவது வழக்கம். அந்த ஆணையம் வெளியிட்டுள்ள 2009ம் ஆண்டுக்கான விவரக்குறிப்பேட்டின் மூலம், இந்த விவசாயிகள் தற்கொலை சம்பவ விவரங்கள் தெரிய வந்துள்ளன.மற்ற மாநிலங்களைப் போல, விவசாயிகளின் தற்கொலை சம்பவங்கள் தமிழகத்தில் இல்லை என்று, பரவலாக செய்திகள் வெளியாகி இருந்தன. இந்த சூழ்நிலையில் குற்றப்பதிவு ஆணையத்தின் விவரங்களின்படி, தமிழகத்தில் 2009ம் ஆண்டில் மட்டும், 1,060 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


அதில், 856 பேர் ஆண்கள்; 204 பேர் பெண்கள். அகில இந்திய அளவில் இது 7.3 சதவீதம். இதற்கு முந்தைய ஆண்டான 2008ம் ஆண்டு தமிழகத்தில் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை 512 ஆக மட்டுமே இருந்தது. ஒரே ஆண்டில் தமிழகத்தில் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.நகரங்களை பொறுத்தவரை பெங்களூருக்கு அருகில் 47 விவசாயிகளும், லக்னோ அருகில் 113 விவசாயிகளும், கான்பூருக்கு அருகில் 40 விவசாயிகளும் தற்கொலை செய்துள்ளனர்.மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களினால் தற்கொலை செய்த மாணவர்களின் எண்ணிக்கையும் அந்த ஆணையம் வெளியிட்டுள்ளது.


அதன்படி நாடு முழுவதும் 2009ல் 6,530 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் மொத்தம் 456 மாணவர்கள் 2009ம் ஆண்டில் தற்கொலை செய்துள்ளனர். இதில் மாணவர்கள் 257 பேர். மாணவியர் 199 பேர். அதே ஆண்டில் புதுச்சேரியில் 26 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.2009ம் ஆண்டில் மேற்கு வங்கத்தில் 870 மாணவர்களும், மகாராஷ்டிராவில் 812 மாணவர்களும், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் 597 மாணவர்களும், கர்நாடகாவில் 507 மாணவர்களும், உத்தர பிரதேசத்தில் 346 மாணவர்களும் தற்கொலை செய்துள்ளனர்.தமிழகத்தைப் பொறுத்தவரை தலைநகர் சென்னையில் 2009ம் ஆண்டில் மட்டும் 91 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.


இவர்களில் 50 பேர் மாணவர்கள்; 41 பேர் மாணவியர். அதேபோல கோயம்புத்தூரில் 22 மாணவர்கள் 2009ல் தற்கொலை செய்துள்ளனர்.இவர்களில் 7 பேர் மாணவர்கள்; 15 பேர் மாணவியர். இவற்றோடு ஒப்பிடுகையில் முக்கிய நகரமான மதுரையில் தற்கொலை எண்ணிக்கை குறைவாக தெரிகிறது. 2009ல் மட்டும் மதுரை நகரில் ஆறு மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இவர்களில் 4 பேர் மாணவர்கள்; 2 பேர் மாணவியர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts