background img

புதிய வரவு

பிரதமருடன் அரசியல் பேசவில்லை: வைகோ!

பிரதமர் மன்மோகன்சிங்கை சனிக்கிழமையன்று டில்லியில் சந்தித்த வைகோ, அவருடன் அரசியல் பேசவில்லை; தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலை தடுத்து நிறுத்தும்படி வலியுறுத்தினேன் என்று கூறியுள்ளார்.


ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பிரதமர் மன்மோகன் சிங்கை சனிக்கிழமை காலை டில்லியில் அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா குறித்து அவர் எழுதிய `யெஸ் வி கேன்' என்ற நூலைக் கையெழுத்திட்டு பிரதமரிடம் கொடுத்தார். பிரதமரிடம் கோரிக்கை மனு ஒன்றையும் கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:


சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கயல்விழி என்கிற அங்கயற்கண்ணி, இலங்கை ராணுவத்தினரால், ஓமந்தையில் கைது செய்யப்பட்டு உள்ள செய்தியை தங்கள் கவனத்துக்குக் கொண்டு வந்தேன். அவர்களை உடனடியாக விடுவித்து, பாதுகாப்பாகத் தமிழகம் திரும்பிட ஆவன செய்திடுமாறு தங்களிடம் கேட்டுக்கொண்டேன்.


நேற்று இரவு, அவர்கள் பாதுகாப்பாகத் தமிழகம் திரும்பி விட்டார்கள். அதற்காக தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


விடுதலைப்புலிகளை எதிர்த்துப் போரிடுகிறோம் என்ற போர்வையில், இலங்கை அரசு தமிழர் இனக்கொலையை நடத்தி இருக்கிறது. அந்தப் படுகொலைகளைத் தடுப்பதற்குப் பதிலாக, இந்திய அரசு, இலங்கைக்கு ஆயுதங்கள் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்து இருக்கிறது.


அதற்கும் மேலாக, இலங்கைக் குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சேவை, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் சிறப்பு விருந்தினராக, சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றுப் பெருமைப்படுத்தியது தமிழரின் மனக்காயங்களை மேலும் குத்திக் கிளறி இருக்கிறது.


கடந்த 30 ஆண்டுகளில், தமிழ்நாட்டு மீனவர்கள் சிந்திய வியர்வையும், சிங்களக் கடற்படையின் தாக்குதலுக்கு உள்ளாகி அவர்கள் உடலில் இருந்து கொட்டிய ரத்தமும், பாக் நீரிணையில் கலந்து இருக்கிறது. இந்திய கடற்படையும், கடலோரக் காவல்படையும், அத்தனை கொடுமைகளையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்ததே தவிர, சிங்களக் கடற்படையினரின் தாக்குதலில் இருந்து தமிழக மீனவர்களைப் பாதுகாக்கவில்லை. தமிழக மீனவர்களைக் காப்பாற்ற வேண்டியது, இந்திய கடற்படை, கடலோரக் காவல்படையினரின் கடமை இல்லையா?


குஜராத் மீனவர்கள் எத்தனையோ முறை கடல் எல்லையைத் தாண்டிச் சென்றபோதிலும்கூட, பாகிஸ்தான் கடற்படை ஒருபோதும் அவர்களைத் தாக்கியது இல்லை. ஆனால், இலங்கைக் கடற்படை, 500 தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொன்று விட்டது. இந்தப் பிரச்சனையின் கடுமையை உணர்ந்து, இலங்கை அரசை எச்சரிக்க வேண்டியது இந்திய அரசின் கடமை அல்லவா? எனவே, இந்தப் பிரச்சினையை தொலைநோக்குப் பார்வையோடு அணுகுமாறு தங்களை அன்புடன் வேண்டுகிறேன்.


இவ்வாறு வைகோ குறிப்பிட்டு உள்ளார். சந்திப்பு முடிந்து வெளியில் வந்தபோது, வைகோவிடம் செய்தியாளர்கள், `நீங்கள் வேறு அரசியல் பற்றிப் பேசினீர்களா?' என்று கேட்டனர்.


`இல்லை. நாங்கள் அ.தி.மு.க. கூட்டணியில் வலுவாக இருக்கிறோம். தி.மு.க., காங்கிரசைத் தமிழ்நாட்டில் தோற்கடிக்க உறுதியோடு இருக்கிறோம். அந்த அணி, படுதோல்வி அடையும். அ.தி.மு.க. அணி வெல்லும். அ.தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்கும். அதனால், நான் வேறு அரசியல் எதுவும் பிரதமரிடம் பேசவில்லை' என்றார் வைகோ.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts