21/Mar - 19/Apr
மேஷம் (அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 9-ல் இருக்கிறார். 5-க்குடைய சூரியன் சாரம் பெறுகிறார். சூரியனோடும் சேர்ந்து இருக்கிறார். ராசிநாதன் திரிகோணாதிபதியின் சாரம் பெற்று திரிகோணத்தில் இருப்பது விசேஷம். கேந்திர ஸ்தானம் என்பது விஷ்ணு ஸ்தானம். திரிகோணம் என்பது லட்சுமி ஸ்தானம். கேந்திரம் என்பது முயற்சி ஸ்தானம். உழைத்த உழைப்பிற்குக் கூலி கிடைக்கும். திரிகோணம் என்பது தெய்வ அனுகூலம். கூலிக்கு மேல் அன்பளிப்பு, ஊக்க போனஸ் கிடைப்பது போல 9-க்குடையவர் குரு 12-ல் மறைவது விரயம் அல்லது ஏமாற்றம் என்றாலும், செவ்வாய் அவரைப் பார்ப்பதால் தர்மகர்மாதிபதி யோகம் எனப்படும். ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கும்போது வரிசையில் நின்றவர்கள் அனைவரையும் இன்று முடிந்து விட்டது என்று திருப்பி அனுப்பி விட்டாலும், வேண்டியவரை மட்டும் நிறுத்தி வைத்து அவருக்குத் தனியாக பொருள் வழங்குவதுபோல உங்கள் காரியங்கள் நிறைவேறும்; தேவைகள் பூர்த்தியடையும்.
20/Apr - 20/May
ரிஷபம் (கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 7-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். 11-ல் நிற்கும் குருவின் சாரம் பெற்று அந்த குருவாலும் பார்க்கப் பெறுகிறார். வார மத்தியில் ரிஷப ராசிக்கு 5-ல் நிற்கும் சனியின் சாரம் பெற்றும், அந்த சனியாலும் பார்க்கப்படுகிறார். 2, 5-க்குடைய புதனும் அவருடன் சேர்ந்திருக்கிறார். எனவே, அடிப்படை வாழ்க்கை வசதி, தேவைகள் இவற்றுக்கு எந்த பாதிப்பும் இல்லை. 2-ஆம் இடத்துக் கேதுவும் 8-ஆம் இடத்து ராகுவும் தேவையில்லாத மனக் குழப்பங்களையும் சஞ்சலங்களையும் ஏற்படுத்தும். மறைமுக எதிரிகளின் அவதூறுகளையும் உருவாக்கும். உற்றார்- உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் வகையிலும் குழப்பங்களையும் எதிர்கால சந்தேகங்களையும் தேவையற்ற கவலைகளையும் ஏற்படுத்தும். இதுதான் கேதுவின் வேலை. 5-ஆம் இடத்துச் சனி மனதில் சந்தேகத்தையும் சலனங்களையும் ஏற்படுத்தும். என்றாலும் 11-ஆம் இடத்து ஆட்சி பெற்ற குரு 'எந்த பயமில்லை; எந்தச் சூழ்நிலையிலும் சவாலை சந்திக்கலாம்' என்ற தைரியத்தைக் கொடுக்கும்.
21/May - 21/Jun
மிதுனம் (மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிக்காரர்களுக்கு ஜென்மத்தில் கேது நிற்பதும், 7-ல் ராகு நிற்பதும் சர்ப்ப தோஷம்தான். அத்துடன் 7-க்குடைய குருவையும் மனைவி காரகன் சுக்கிரனையும் ஜென்ம ராசியையும் ராசிநாதன் புதனையும் சனி பார்ப்பதால், கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடுகளும் ஒருவரை ஒருவர் புரிதலின்றி பிரியும் சூல்நிலையும் உருவாகும். தசா புக்திகள் பாதகமாக இருந்தால் கணவன்- மனைவிக்குள் பிரிவும் பிளவும் ஏற்படலாம். அடிப்படை ஜாதகம் வலுவாக இருந்தால் தற்காலிகப் பிரிவு ஏற்பட்டு குருப்பெயர்ச்சிக்குப் பிறகு ஒன்று சேரலாம். திருமணமாகாத ஆணுக்கும் சரி; பெண்ணுக்கும் சரி- திருமணம் தடைப்படலாம்; தாமதமாகலாம். 6-க்குடைய செவ்வாய் 7-ல் நிற்பதும் ஒரு தோஷம். திருமணத் தடை விலக ஆண்களுக்கு கந்தர்வ ராஜ ஹோமமும், பெண்களுக்கு பார்வதி சுயம்வரகலா ஹோமமும் செய்ய வேண்டும். குடும்பப் பிரிவைத் தடுக்க மனோன்மணி ஹோமம் அல்லது உமா மகேஸ்வரி ஹோமம் செய்ய வேண்டும்.
22/Jun - 22/Jul
கடகம் (புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசிக்கு 6, 9-க்குடைய குரு 9-ல் நின்று கடக ராசியைப் பார்க்கிறார். அதனால் 6-க்குடைய பலனையும் செய்வார்; 9-க்குடைய பலனையும் செய்வார். குரு 7, 8-க்குடைய சனியின் சாரம் பெற்று சனியால் பார்க்கவும் படுகிறார். அதனால் 6, 7, 8, 9 ஆகிய எல்லா பலன்களையும் கடக ராசிக்காரர்கள் சந்திக்க வேண்டும். 6-ஆம் இடம் என்பது கடன், வைத்தியச் செலவு, நோய், போட்டி, பொறாமை, எதிரி. 7- என்பது திருமணம், மனைவி. 8- என்பது கவலை, சஞ்சலம், இடப்பெயர்ச்சி. 9- என்பது தகப்பனார், பூர்வ புண்ணிய பாக்கியம். சனி 3-ல் இருக்கிறார். அது சகோதர சகாய ஸ்தானம். சகோதரர்கள் வகையில் அல்லது நண்பர்கள் வகையில் உதவியும் ஒத்துழைப்பும் உண்டாகும். கடக ராசிக்கு 5, 10-க்குடைய செவ்வாய் ராசியை 8-ஆம் பார்வை பார்ப்பதால் தொழில் இயக்கம், புது முயற்சிகள் கைகூடும். சில நேரங்களில் தடை, தாமதங்களையும் போட்டி, பொறாமைகளையும் சந்தித்து முன்னேற வேண்டும். மொத்தத்தில் 9-ஆம் இடத்து குரு பார்வை வீண்போகாது; உங்களை வழிநடத்தும்.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியன் 5-ல் நிற்பதும் திரிகோணாதிபதி செவ்வாயோடு சேர்ந்து இருப்பதும் உங்களுக்கு ப்ளஸ் பாயிண்ட். அதனால் உங்கள் எண்ணங்களும் திட்டங்களும் நிறைவேற வாய்ப்பு ஏற்படும். அவர்களுடன் ராகு- கேது சம்பந்தப்பட்டு அவர்களுக்கு வீடு கொடுத்த குரு 8-ல் மறைவதால், இடுவார் பிச்சையை சிலர் கெடுப்பதுபோல சில தடைகளும் அவதூறுகளும் கெடுதல்களும் ஏற்படலாம். இருந்தாலும் கெடுவான் கேடு நினைப்பான் என்பது போல உங்களுக்கு கெடுதல் நினைத்தவர்கள் கெட்டுப் போவார்கள். அதற்கு அடிப்படைக் காரணம் 2-ஆம் இடத்துச் சனியும் ஏழரைச் சனியின் கடைக்கூறும்தான். இரண்டாம் சுற்று ஏழரைச் சனியில் இருப்பவர்களுக்கு- இதுவரை பொங்கு சனியின் பலனை அனுபவிக்காதவர்களுக்கு குருப்பெயர்ச்சிக்குப் பிறகு பொங்கு சனியின் தங்கு தடையில்லாத யோகங்கள் நடக்கும். அதுவரை, நம்பிக்கையோடும் பொறுமையோடும் காத்திருங்கள். கஷ்டம் கஷ்டமாகவே இருக்காது; இரவுக்குப்பின் பகல் விடியும்.
கன்னி (உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிக்கு ஜென்மச் சனி நடக்கிறது. சனி நிற்பது சந்திரன் சாரம். ஜாதகத்தில் சந்திர தசையோ சந்திர புக்தியோ நடப்பவர்களுக்கு சோதனையும் வேதனையும் சுனாமி வேகத்தில் வரும் என்பது மறுக்க முடியாத உண்மை. ஜாதக தசா புக்தி வலுவும் குருவருளும் திருவருளும் நன்றாக இருந்தால் எவ்வளவு பெரிய சங்கடங்களையும் சமாளிக்கலாம். பஞ்சபாண்டவர்களுக்கு தசா புக்தி, கோட்சாரம் எல்லாம் எதிர்மறைவாக இருந்ததால் நாடிழந்து, நகரிழந்து, வீடு, வாசல் இழந்து நாடோடிகளாக காடுகளில் திரிந்தார்கள். இருந்தாலும் அவர்களுக்குத் துணையாக கண்ண பரமாத்மா கூடவே இருந்து அந்தக் கஷ்டங்களைத் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவத்தைக் கொடுத்தார். கண்ணன் கூட துணையிருந்தாலும் அவர்களுக்குக் கஷ்டம் வராமல் தடுக்க முடியவில்லை. கண்ணன் துணையில்லாமல் இருந்தால் அவர்கள் புல்லோடு புல்லாக மண்ணோடு மண்ணாகி மடிந்திருப்பார்கள். மீண்டும் அஸ்தினாபுரத்தைக் கைப்பற்றி இருக்க முடியாது. அதுபோல உங்களுக்கும் எதிர்காலத்தில் வாழ்வு வரும்; வசதி வரும்.
துலாம் (சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிக்கு 12-ல் சனி. ஏழரைச் சனி விரயச் சனி நடக்கிறது. துலா ராசிக்கும் ரிஷப ராசிக்கும் சனிதான் ராஜயோகாதிபதி. அவர் 12-ல் மறைவதால் யோகத்தைக் கெடுக்க மாட்டார் என்றாலும் கொடுக்கவும் மாட்டார் என்பதுதான் உண்மை. நரி வலம் போனால் நல்லதா இடம் போனால் நல்லதா என்பதைவிட மேலே விழுந்து கடிக்காமல் போனால் நல்லது என்பது மாதிரிதான். முதல் சுற்று ஏழரைச் சனி நடப்பவர்களுக்கு விரயச் சனி ஏமாற்றம், நஷ்டமான விரயங்களைத் தரும். இரண்டாம் சுற்று ஏழரைச் சனி நடப்பவர்களுக்கு ஜாதக தசா புக்திகளை அனுசரித்து சாதகமோ பாதகமோ நடக்கும். 4-க்குடையவர் 12-ல் மறைவதால் தாயாருக்கு ஆரோக்கியக் குறைவு, உங்களுக்கு சௌகர்யக் குறைவு, பூமி, வீடு, வாகன சம்பந்தமான நஷ்டம், ஆதாயக் குறைவு, பிள்ளைகள் வகையிலும் மன நிம்மதிக் குறைவு போன்ற பலன்களைச் சந்திக்க நேரும்.
விருச்சிகம் (விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் தன் ராசிக்கு 2-ல் இருப்பதும் அவருக்கு வீடு கொடுத்த குரு 5-ல் ஆட்சி பெற்று ராசியைப் பார்ப்பதும் சிறப்புதான். செவ்வாய்க்கு சாரம் கொடுத்த சூரியனும் அவரோடு இருப்பதும் அதனினும் சிறப்பு. அதனால் அடிப்படை வாழ்க்கை வசதிகளுக்கும் சௌகரியங்களுக்கும் செல்வாக்கு, பெருமை இவற்றுக்கும் குறைவில்லை. தாராளமான பண வசதியும் செலவுக்கேற்ற வருமானமும் அமையும். ராகு-கேது சம்பந்தம் பெறுவதால் சிலருக்கு வரவுக்கு மீறிய செலவுகளும் வாக்கு நாணயத்தைக் காப்பாற்றுவதில் சோதனையும் ஏற்படும். தனக்கு வரவேண்டிய பணம் தடையாவதும் கொடுக்க வேண்டிய பாக்கி சாக்கிக்கு தடாலடி கெடுபிடியும் உண்டாகும். 8-ஆம் இடத்துக் கேது அதனை ஒட்டிய எதிர்காலத்தைப் பற்றிய கவலையையும் சஞ்சலத்தையும் ஏற்படுத்தும். சிலருக்கு மனைவி, குடும்பம் வகையில் ஒத்துழைப்புக் குறைவும் மன வேதனையும் உருவாகும். எது எப்படிப் போனாலும் 11-ஆம் இடத்து சனியும் 5-ஆம் இடத்துக் குருவும் உங்கள் ராசியைப் பார்ப்பதால், குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும் என்பதுபோல ஆறுதல் ஏற்படும்.
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிநாதன் குரு 4-ல் ஆட்சி பெறுகிறார். அதனால் உணவு, உடை, உறைவிட வசதிகளுக்குக் குறைவில்லை- 'குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா' என்று பாடுவதுபோல. அடிப்படை சௌகர்யங்களுக்குக் குறைவில்லை. ஜென்ம ராகு, சப்தம கேது, 10-ஆம் இடத்துச் சனி- இவர்கள் மூவரும் குறைவில்லை என்றாலும் மனதில் நிறைவில்லை என்பதுபோல ஒரு வெறுமையான சூழ்நிலையை உருவாக்கும். சிலருக்கு உடல் ஆரோக்கியத்தைப் பற்றிய கவலை. சிலருக்குத் திருமணத்தைப் பற்றிய கவலை. சிலருக்கு எதிர்காலத் தொழில் வளர்ச்சியைப் பற்றிய கவலை. சிலருக்கு வாரிசு இல்லை. இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை. எந்தக் கவலை இருந்தாலும் ராசிநாதன் ஆட்சி பெறுவதால் பயப்பட வேண்டாம். ராசிநாதனோ லக்னநாதனோ வலுப்பெற்றால் அந்த ஜாதகருக்கு சந்தர்ப்ப சூழ்நிலைகள் எதிராக அமைந்தாலும் வீழ்ச்சியில்லை; தாழ்ச்சியில்லை. மழை வெள்ளம் கரை புரண்டு ஓடினாலும் தடுப்புச் சுவர் காப்பாற்றுவதுபோல.
மகரம் (உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிநாதன் சனி 9-ல் இருப்பது சிறப்பு. அவரை 3-ல் ஆட்சி பெற்ற குரு பார்ப்பதும் சிறப்பு. எவ்வளவு கஷ்ட-நஷ்டங்கள் வந்தபோதிலும் தோல்வியும் துன்பமும் தொடர்ந்தாலும் அவற்றைக் கடந்து முன்னேற்றப் பாதையில் பயணம் தொடரும். படிப்படியான நிவாரணம் அடைந்து உடல்நலம், மனநலம் இரண்டும் வலுப்பெறும். பாவ கிரகங்கள் 6, 8, 12-ல் மறைவது நல்லது. அதன்படி 6-ல் கேதுவும், 12-ல் அட்டமாதிபதி சூரியனும் ராகுவும் மறைவது நல்லது. சங்கடங்கள் தோன்றினாலும் தாமாகவே விலகி ஓடிப்போய்விடும். 4, 11-க்குடைய சுக லாபாதிபதி செவ்வாயும் 12-ல் மறைவது கெடுதல்தான். அதனால் சிலருக்கு உடல்நலக் குறைவு, பூமி, வீடு, வாகன வகையில் செலவு ஏற்படலாம். தாயார் இருப்பவர்களுக்கு இக்காலம் கெடுதல் ஏற்படலாம். தனக்கு வர வேண்டிய லாபம், வெற்றி, நன்மைகளும் தடையாகலாம்; தாமதமாகலாம். ஜாதக தசாபுக்திகள் யோகமாக இருந்தால் மேலே கண்ட கோட்சார கெடுதல்கள் எல்லாம் மலைபோல வந்தாலும் பனிபோல விலகிப் போய்விடும்.
கும்பம் (அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசிநாதன் சனி 8-ல் இருப்பது குற்றம்தான். என்றாலும் 2-க்குடைய குரு ஆட்சி பெற்று அவரைப் பார்ப்பதால் தோஷம் நிவர்த்தியாகிறது. சிலருக்கு இடமாற்றம், ஊர் மாற்றம், பணி மாற்றம் ஏற்படலாம். அதனால் நன்மை இருக்கிறதோ இல்லையோ- தினசரி கடன்காரர்களின் தொல்லையில் இருந்து விடுபட்டுப் போகும் ஆறுதல் கிடைக்கும். கடன்காரர்களின் தொல்லை குறைந்தாலும் கடன் அடைபடவில்லையே என்ற கவலை இருக்கத்தான் செய்யும். வழக்கு விவகாரங்களைச் சந்தித்தவர்களுக்கு அடுத்தடுத்த வாய்தாக்களின் விரயங்கள் நீண்ட குறைந்து கால வாய்தாவினால் கொஞ்சம் மாறுதல் உண்டாகும். கூடியவரை அட்டமத்துச் சனி வரை விசாரணையும் வாய்தாவும் நீடிப்பது நல்லது. அதன்பிறகு தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும் என்பதைத் தீர்க்கமாக நம்பலாம். இடைநடுவில் குருப்பெயர்ச்சி உங்களுக்கு ஆறுதலான மாறுதலை ஏற்படுத்தும். முன்னேற்றமான திருப்பத்தை ஏற்படுத்தும்.
19/Feb - 20/Mar
மீனம் (பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிநாதன் குரு ஆட்சியாக இருக்கிறார். லாப விரயாதிபதியான சனியின் சாரம் பெறுகிறார். ஆக லாபமும் வரவும் உண்டு; செலவும் விரயமும் உண்டு. 7-ல் உள்ள சனி 9-ஆம் இடம், ஜென்மம், 4-ஆம் இடங்களைப் பார்க்கிறார். ஆக இந்தப் பலன்களையும் குரு தருவார். தகப்பனார் வழி நன்மை, பூர்வீகச் சொத்து விவகாரங்களில் அனுகூலம், செல்வாக்கு, மதிப்பு, மரியாதை, கௌரவம், பூமி, வீடு, வாகன வகையில் சுபச் செலவு ஆகிய பலன்களும் நடக்கும். 4-ல் கேது- சிலருக்கு சௌக்கியக் குறைவு ஏற்பட்டாலும் எளிய சிகிச்சை முறையில் மாறிவிடும். சிலருக்குத் தாய் வகையில் விரயங்கள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் மந்தப்போக்கு, மறதி, தடை ஏற்பட வாய்ப்புண்டு. ஆர்வமும் அக்கறையும் அவசியம். அத்துடன் ஹயக்ரீவர் மந்திரத்தை தினசரி ஜெப பாராயணம் செய்வதும், ஹயக்ரீவர் வழிபாடும் நல்லது. 7-ல் சனி- மனைவி வகையில் உடல் உபாதைகளை ஏற்படுத்தும் என்பதால் ஆஞ்சனேயரையும் தன்வந்திரியையும் வழிபடவும்.
0 comments :
Post a Comment