background img

புதிய வரவு

2ஜி விவகாரம்: கருணாநிதி புதிய விளக்கம்

தொலைத்தொடர்பில் மக்களுக்கு சலுகைகளை அளிக்கவே 2ஜி அலைக்கற்றை ஏலம் விடப்படவில்லை என்று முதல்வர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

2ஜி அலைக்கற்றை விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. பா.ஜ.க.தலைவர் தலைமையில் உள்ள பொதுக் கணக்குக் குழுவும் அதைப் பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறது.மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமையிலான குழுவும் விசாரணை நடத்தி வருகிறது.

மத்திய அரசின் சிபிஐ பிரிவும், அமலாக்கப் பிரிவும் உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் தனித்தனியாக இதுபற்றி விசாரித்துக் கொண்டிருக்கின்றன.அதற்கிடையில் பலரும் அதைப் பற்றி கருத்துத் தெரிவிக்கிறார்கள்.எனவே, அவர்களுக்கு விளக்கம் அளிக்க விரும்புகிறேன்.

2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் தணிக்கைக் குழு அளித்த அறிக்கையில் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு என்று சொல்லும் போதே அது அனுமானத்தின் அடிப்படையில்தான் என்ற வார்த்தையைக் கூறியிருக்கிறது.

ஆனால், உடனே எதிர்க்கட்சியினர் அந்தத் தொகையையே லஞ்சம், ஊழல் என்று பிரசாரம் செய்தார்கள்;செய்கிறார்கள்.இப்படி நடந்து இருந்தால் அரசுக்கு இவ்வளவு வருவாய் வந்திருக்கக் கூடும் என்று சில மேற்கோள்களைக் காட்டி ஊழல் என்கிறார்கள்.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் கபில் சிபில்,திட்டக் குழுத் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர்.

ஏன் ஏலம் விடப்படவில்லை? ஏலத்தில் விட்டிருந்தால் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி அளவுக்கு வருவாய் வந்திருக்கும் என்று அனுமானித்து குற்றச்சாட்டு சொல்லப்படுகிறது. ஏலத்தில் ஏன் விடப்படவில்லை என்பதற்கான விளக்கமும் பலராலும் தரப்பட்டு விட்டது.

தொலைத்தொடர்பு துறையில் மக்களுக்கு சலுகைகளை அளிக்க வேண்டாம் எனக் கருதி இருந்தால், யாராவது ஏலம் எடுத்து மக்களிடம் இருந்து அதிகத் தொகையை வசூலித்துக் கொள்ளட்டும் என நினைத்திருந்தால் லாபம் கூட வந்திருக்கும்.

மக்கள் நல அரசு என்கிற போது அந்த அரசு வணிக நோக்கத்தோடு லாபம் ஈட்டுவதையே நோக்கமாகக் கொண்டு நடைபெறாது. சமூக நன்மையைக் கருத்தில் கொண்டு அரசு நடைபெற வேண்டுமே தவிர, நிதி இழப்பு-மிச்சம் என்பதை மட்டும் கவனத்தில் கெண்டு நடைபெறுவது நல்லதல்ல.

தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்காக ஓராண்டுக்கு 17 ஆயிரத்து 921 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.இந்தத் திட்டங்களை எல்லாம் அரசு நடைமுறைப்படுத்தாமல்- மக்கள் எப்படி வாழ்ந்தால் என்ன என்று இருந்தால் அரசுக்கு ஆண்டுக்கு 17 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக செலவே ஏற்பட்டு இருக்காது. இதை அரசுக்கு இழப்பு என்று யாராவது கூற முடியுமா?

ஒரு காலத்தில் செல்போன் அறிமுகப்படுத்தப்பட்டபோது கருவியின் விலை ரூ.30 ஆயிரத்துக்கு மேல் இருந்தது. இப்போது சாதாரண மக்களிடம் கூட செல்போன் உள்ளது.

செல்போன் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் ஒரு நிமிடம் பேச ஒரு அழைப்புக்கு ரூ.16-ம், அழைக்கப்பட்டவர் ரூ.8-ம் செலுத்த வேண்டும்.இப்போது ஒரு நிமிடத்துக்கு 30 பைசா என்கிற நிலைமை ஏற்பட்டுள்ளது. இது மேலும் குறையக் கூடும் என்று சொல்கிறார்கள்.

மாதத்துக்கு இதற்காகும் செலவு ரூ.340 என்பதில் இருந்து ரூ.120 ஆகக் குறைந்துள்ளது. தொலைத்தொடர்பு துறை சார்பாக எடுக்கப்பட்ட முடிவு 2011-க்குள் 600 மில்லியன் மக்களுக்கு தொலைத் தொடர்புத் துறையின் பயன் சென்று அடைய வேண்டும் என்பதாகும்.

ஆனால், இதற்குள் தொலைத் தொடர்பு பயன் கிடைத்து இருக்கும் மக்களின் எண்ணிக்கை 720 மில்லியன் என்பதாகும்.ஏலம் ஏன் விடவில்லை என்று ஒரு கேள்வி கேட்கப்படுகிறது.ஏன் ஏலம் விடப்படவில்லை என்றால் ஏலம் விடத் தேவையில்லை என்று தொலைத் தொடர்புத் துறைக்கு ஆலோசனை கூறுகின்ற அதிகாரத்தில் உள்ள டிராய் அமைப்பு கூறியிருக்கிறது.

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கை பா.ஜனதா ஆட்சியில் வகுக்கப்பட்ட தேசிய தொலைத் தொடர்புக் கொள்கையின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டதாகும். அவர்கள் எந்த முறையைப் பின்பற்றி இந்த உரிமங்களை வழங்கினார்களோ அதே நடைமுறைதான் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுகிறது இவ்வாறு அதில் கருணாநிதி கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts