background img

புதிய வரவு

மீனவர் மீது தாக்குதல்:அரசைக் கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைத் தட்டிக் கேட்காத மத்திய அரசையும்,அதற்கு உறுதுணையாக இருக்கும் தமிழக அரசையும் கண்டித்து அதிமுக சார்பில் ஜனவரி 28 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ 3 என்ற அளவில் உயர்த்தப்பட்டது. ஒரே மாதத்திற்குள் பெட்ரோலின் விலை ரூ.2.55 என்ற அளவிற்கு ஜனவரி மாதம் 14 ஆம் தேதியன்று மீண்டும் உயர்த்தப்பட்டது.

அதாவது ஒரே மாதத்தில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ 5.55 என்ற அளவிற்கு உயர்த்தப்பட்டுவிட்டது.

இதனால் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தும் பொதுமக்களும்,ஆட்டோவில் செல்லும் சாதாரண மக்களும்,ஆட்டோ ஓட்டுநர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மக்களை அன்றாடம் வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வை குறைக்க வேண்டிய மத்திய அரசு, பெட்ரோல் விலை உயர்வின் மூலம் விலைவாசி உயர்விற்கு வழி வகுத்துள்ளது.

உள்நாட்டுப் பிரச்சினை தான் இப்படி இருக்கிறது என்றால், அண்டை நாடுகளுடனான பிரச்னை இதைவிட மோசமாக இருக்கிறது.கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும்,கொல்லப்படுவதும், துன்புறுத்தப்படுவதும்,அவர்களுடைய உடைமைகள் சேதப்படுத்தப்படுவதும் அன்றாட செய்திகளாக ஆகிவிட்டன.

பத்து நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த தமிழக மீனவர் பாண்டியன் இலங்கை கடற்படையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் ஒன்றியம், புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் கடலுக்குள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது இலங்கைக் கடற்படையினரால் கழுத்தில் கயிற்றினால் சுருக்கிட்டு இழுத்துக் கொல்லப்பட்டு இருக்கிறார்.

இலங்கை அரசை கடுமையாக எச்சரிக்க வேண்டிய மத்திய அரசு இந்தப் பிரச்சினையை ஒரு பொருட்டாகவே கருதவில்லை.மத்திய அரசும், திமுக அரசும் மக்கள் விரோத அரசுகளாக விளங்குகின்றன.

எனவே, பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதற்குக் காரணமான, இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதைத் தட்டிக் கேட்காத மத்திய அரசைக் கண்டித்தும்,மத்திய அரசின் மக்கள் விரோத செயலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் திமுக அரசைக் கண்டித்தும் அதிமுக சார்பில், 28.1.2011 வெள்ளிக் கிழமை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஜெயலலிதா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts