ஆடுகளம் விமர்சனம்
சினிமாவை பொழுதுபோக்கிற்கும் மேலாக பார்க்கிற இயக்குனர்கள் இருக்கிறார்கள். ஆடுகளம் வெற்றிமாறனையும் அந்தப் பட்டியலில் இணைத்திருக்கிறது.
தனி மனிதனின் வன்மம் பல மனிதர்களின் வாழ்க்கையை எப்படி துண்டாடுகிறது என்பதை அன்பும், ஆரவாரமும், புழுதியேறிய போர்க்குணமும் கொண்ட மதுரைப் பின்னணியில் ஆவணமாக்கப்பட்டிருக்கிறது.
FILE
தடை செய்யப்பட்டிருக்கும் சேவல் சண்டை வெறும் பொழுதுபோக்கல்ல. பலருக்கு அது கௌரவப் பிரச்சனை. சேவல்களை பழக்குவது போர் வீரர்களை தயார்படுத்துவதுபோல. பேட்டைக்காரனுக்கு சேவல்களை பழக்குவது தொழில். சுற்று வட்டாரத்தில் ராஜாவைப் போல திரியும் அவரின் பெருமையை அவரது சீடப்பிள்ளை கருப்பு ஒரே நாளில் தாண்டி விடுகிறான். பொறாமையில் பொசுங்கும் பேட்டைக்காரன் வீசும் ஒவ்வொரு கண்ணியும் கருப்பின் காலை வாரி, கடைசியில் அவன் கழுத்தில் கத்தி வைக்கிறது.
கே.பி.கருப்பு என்ற டோண்ட்கேர் கேரக்டர் தனுஷுக்கு. தெருப் பையனின் தொல்லை பொறுக்காமல் இவரை காதலிக்கிறேன் என்று தனுஷை கை காண்பிக்கிறார் ஆங்கிலோ இந்தியரான ஐரின் (தபசீ). அதற்கு அடுத்த ஐந்து நிமிடம் தனுஷ் காட்டுகிற எக்ஸ்பிரஷனுக்கு கை வலிக்க அடிக்கலாம் அப்ளாஸ். அம்மா இறந்த துக்கத்தில், தபசீயிடம் அவர் பேசுகிற வார்த்தைகள் ஒவ்வொன்றும் சொல் பேச்சு கேட்காத மகனின் நிஜமான பாவமன்னிப்பு.
ஆடுகளத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமிப்பவர் பேட்டைக்காரனாக வரும் வஐச ஜெயபாலன். வன்மம் முதல் பாசம் வரை நவரசமும் இவரின் தாடி மீசை முகத்தில் தாண்டவமாடுகிறது. ஒரு அற்புத நடிகரை அடையாளம் காட்டியதற்கு வெற்றிமாறனுக்கு ஸ்பெஷல் பொக்கேயே தரலாம். கிஷோரா இது? அச்சு அசல் மண்ணின் மைந்தன். பார் ஓனராக வரும் இவர், கருப்பு ஏன் தன்னை கொல்லாமல் விட்டான் என்ற சந்தேகம் துளியும் இன்றி அவனை கொலை செய்ய துரத்துவது நெருடல்.
FILE
படத்தின் ஆகப்பெரிய பலம், கதைக்களம். சேவல் சண்டை, அதை பழக்கும்விதம், மதுரை மனிதர்கள் என பெரும் நிலப்பகுதியொன்றை இரண்டரை மணி நேரம் அனுபவப்படுகிறோம். ஃப்ரேமுக்குள் வரும் அனைவரும் பிறவி நடிகர்களைப் போலவே வாழ்ந்திருக்கிறார்கள். கலை இயக்கமும், ஒளிப்பதிவும் ஆடுகளத்தின் இரு கண்கள் எனலாம்.
பலவீனமும் உண்டு. ஒரே நேர்கோடான கதையை, சேவல் சண்டை நடந்த அன்றுதான் இது நடந்தது என்ற குழப்பமான வாய்ஸ் ஓவருடன் தொடங்கியதை தவிர்த்திருக்கலாம். அதனை தொடர்ந்து வரும் துரத்தல் அநியாயத்துக்கு நீளம். காட்சிகள் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக திரைக்கதையின் கயிற்றை சற்றே தளர்த்தியதில் காட்சிகளின் கட்டுக்கோப்பு மிஸ்ஸிங்.
பின்னணி இசை பல நேரம் காட்சிகளிலிருந்து விலகியே நிற்கிறது. துரையின் சேவல்கள் இறந்து கிடக்கும் காட்சியில் இத்தனை வாத்தியங்கள் கொட்டி முழக்க வேண்டுமா?
கிளைமாக்சில் உண்மை யாருக்கும் தெரியாமலே ஹீரோ காதலியுடன் ஊரைவிட்டுப் போகிறான். கமர்ஷியலான கிளைமாக்சின் இந்த காவியமான முடிவை புரிந்துகொள்ள முடியாத குழப்பத்துடனே வெளியேறுகிறான் சராசரி ரசிகன்.
சிறிய சறுக்கல்கள் இருந்தாலும், ஆடுகளம் தமிழ் சினிமாவின் பெருமைகளில் ஒன்று, சந்தேகமில்லை.
0 comments :
Post a Comment