background img

புதிய வரவு

வரலாறு படைக்குமா இந்தியா!: இன்று தென் ஆப்ரிக்காவுடன் 4வது மோதல்


போர்ட் எலிசபெத்: இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் நான்காவது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. இதில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில், தென் ஆப்ரிக்க மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றி, வரலாறு படைக்கலாம்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. நான்காவது போட்டி, போர்ட் எலிசபெத் நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில், பகலிரவு ஆட்டமாக இன்று நடக்கிறது.
பார்த்திவ் வாய்ப்பு:
முதல் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி, அடுத்த இரண்டு போட்டிகளில் எழுச்சி கண்டது. ஆனாலும், சச்சின், சேவக், காம்பிர் இல்லாத நிலையில், அணியின் துவக்கம் பலவீனமாக உள்ளது. தமிழக வீரர் முரளி விஜய் தொடர்ந்து சொதப்புகிறார். இதையடுத்து இன்று துவக்க வீரராக பார்த்திவ் படேல் களமிறக்கப்படலாம். இளம் வீரர் விராத் கோஹ்லி நம்பிக்கை அளிக்கிறார். "மிடில்-ஆர்டரில்' சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், கேப்டன் தோனி உள்ளிட்டோர் அதிக ரன் சேர்க்க வேண்டும்.
யூசுப் அதிரடி:
யூசுப் பதான், இக்கட்டான நிலையில் சிறப்பாக விளையாடுகிறார். கடந்த போட்டியில் வெற்றிக்கு வித்திட்ட இவரது அதிரடி ஆட்டம், இன்றும் தொடரலாம். ஹர்பஜன் சிங், "ஆல்-ரவுண்டராக' சாதிப்பது, பேட்டிங் பலத்தை அதிகரிக்கிறது.
முனாப் முன்னேற்றம்:
இத்தொடரில் இந்திய அணியின் பந்துவீச்சு நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. முனாப் படேல், ஜாகிர் கான் உள்ளிட்ட வேகப்பந்துவீச்சாளர்கள் துல்லியமாக பந்துவீசி எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். "சுழலில்' ஹர்பஜன் அசத்துகிறார்.
ஆம்லா ஏமாற்றம்:
தென் ஆப்ரிக்க அணிக்கு துவக்க வீரர் ஆம்லா ஏமாற்றம் அளித்து வருவது பின்னடைவான விஷயம். கேப்டன் ஸ்மித், பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கிறார். காயம் காரணமாக "ஆல்-ரவுண்டர்' காலிஸ் இல்லாதது பாதிப்பை ஏற்படுத்துகிறது. டிவிலியர்ஸ், டுமினி உள்ளிட்டோர் சோபிக்க தவறுகின்றனர்.
மிரட்டல் வேகம்:
தென் ஆப்ரிக்க அணியின் பலம் வேகப்பந்துவீச்சாளர்கள் தான். ஸ்டைன், மார்கல், டிசோட்சபே அடங்கிய மூவர் கூட்டணி, இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளிக்கிறது. டுமினி, போத்தாவின் "சுழல்' இதுவரை எடுபடவில்லை.
தொடரை கைப்பற்ற இந்தியாவும், சொந்த மண்ணில் சாதிக்க தென் ஆப்ரிக்காவும் தயாராக இருப்பதால், ரசிகர்கள் மீண்டும் ஒரு முறை ஆக்ரோஷமான மோதலை எதிர்பார்க்கலாம்.

முதன்முறை
ஒருநாள் தொடரில் பங்கேற்க இந்திய அணி இரண்டு முறை (1992/93, 2006/07) தென் ஆப்ரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில் இரண்டு முறையும் தென் ஆப்ரிக்க அணி தொடரை கைப்பற்றியது. இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில், தென் ஆப்ரிக்க மண்ணில் முதன்முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றி புதிய வரலாறு படைக்கலாம்.
இம்மைதானத்தில் இதுவரை
போர்ட் எலிசபெத் நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில், இந்திய-தென் ஆப்ரிக்க அணிகள் 3 முறை (1992, 1997, 2006) ஒருநாள் போட்டியில் மோதியுள்ளன. இதில் ஒரு போட்டியில் கூட இந்திய அணி வெற்றி பெறவில்லை. கடந்த 2001ம் ஆண்டு, கென்யா அணிக்கு எதிராக இங்கு நடந்த முத்தரப்பு ஒருநாள் போட்டியில், இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
* இங்கு இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர் 9 விக்கெட்டுக்கு 179 ரன்கள் (1997, எதிர்-தென் ஆப்ரிக்கா). தென் ஆப்ரிக்க அணியின் அதிகபட்ச ஸ்கோர் 3 விக்கெட்டுக்கு 326 ரன்கள் (2002, எதிர்-ஆஸி.,). இந்தியாவுக்கு எதிராக தென் ஆப்ரிக்க அணியின் அதிகபட்ச ஸ்கோர், 8 விக்கெட்டுக்கு 243 ரன்கள் (2006).
நெருக்கடி இல்லை: ஸ்மித்
தென் ஆப்ரிக்க கேப்டன் ஸ்மித் கூறுகையில், ""கடந்த போட்டிகளில், உலக கோப்பை தொடரில் இடம் பிடிக்க சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், எங்கள் அணி வீரர்கள் சோபிக்கத்தவறினர் என நினைக்கிறேன். தற்போது அணி அறிவிக்கப்பட்டதால், அடுத்து வரும் இரண்டு போட்டியிலும் எவ்வித நெருக்கடி இல்லாமல் விளையாடலாம். இதன்மூலம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரை கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. எந்த ஒரு விளையாட்டாக இருந்தாலும் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாது. இருப்பினும் இத்தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொண்டுள்ளோம்,'' என்றார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts