background img

புதிய வரவு

ஆந்திராவை பிரிக்க வேண்டாம் : ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி சிபாரிசு

புதுடெல்லி : ஆந்திராவை பிரிக்க வேண்டாம்;  தனி தெலங்கானா உருவாக்கினால் மிகப்பெரிய பிரச்னைகள் உருவாகும் என்று ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி    கூறியுள்ளது.  தெலங்கானா பிரச்னை தீர  6 பரிந்துரைகளையும் அளித்துள்ளது. இதையடுத்து, தெலங்கானா பகுதிகளில் மீண்டும் கலவரம் வெடித்தது.

‘ஆந்திர மாநிலத்தின் தெலங்கானா பகுதிகளை பிரித்து தனி மாநிலம் உருவாக்க வேண்டும்’ என்று தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டி.ஆர்.எஸ்), பா.ஜ கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆந்திராவை பிரிக்க கூடாது என்று பிரஜா ராஜ்யம் வலியுறுத்தி வருகிறது. ஆனால், தெலங்கானா பகுதியை சேர்ந்த ஆளும் காங்கிரஸ் எம்.பி, எம்எல்ஏக்கள் உட்பட எல்லா கட்சியினரும் கருத்துவேறுபாடின்றி தனி தெலங்கானா வேண்டும் என்று வலியுறுத்துவதால் சிக்கல் ஏற்பட்டது.

இதுகுறித்து ஆராய்ந்து பரிந்துரை அளிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் 5 பேர் கமிட்டியை மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் நியமித்தது. இந்த கமிட்டியினர் கடந்த 11 மாதங்களாக ஆந்திரா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து கருத்து கேட்டறிந்தனர். அரசியல் கட்சியினர், சமூக, தொண்டு நிறுவனங்கள், மாணவர்கள், பெண்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரிடமும் கருத்து கேட்டறிந்து மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் கடந்த மாதம் 30ம் தேதி அறிக்கை சமர்ப்பித்தனர். ஆந்திராவில் அங்கீகரிக்கப்பட்ட 8  கட்சிகளுடன் ஜனவரி 6ம் தேதி ஆலோசிக்கப்படும். அதன்பின் அறிக்கை வெளியிடப்படும் என்று சிதம்பரம் கூறியிருந்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த டி.ஆர்.எஸ், பா.ஜ கட்சிகள் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்தன.

பரபரப்பான சூழ்நிலையில் டெல்லியில் நேற்று காலை ப.சிதம்பரம் தலைமையில் கூட்டம் நடந்தது. இதில் ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, காங்கிரஸ் தலைவர் உத்தம் குமார் ரெட்டி, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பி.ராகவலு, பிரஜா ராஜ்யம் சார்பில் ராமச்சந்திரய்யா ஆகியோர் பங்கேற்றனர். அவர்களுக்கு ஸ்ரீகிருஷ்ணா சமர்ப்பித்த 461 பக்க அறிக்கையின் நகலை சிதம்பரம் வழங்கினார். கூட்டத்தில் தெலுங்கு தேசம், டி.ஆர்.எஸ், பா.ஜ கட்சியினர் கலந்து கொள்ளவில்லை.

கூட்டத்தில் சிதம்பரம் பேசியதாவது: முதலில் உங்களுக்கு புத்தாண்டு மற்றும் சங்கராந்தி வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். தெலங்கானா விவகாரம் குறித்து உங்கள் கருத்துக்களை அறியவே அழைப்பு விடுத்திருந்தேன். கூட்டத்தில் பங்கேற்க சில கட்சிகள் மறுப்பு தெரிவித்தது வருத்தம் அளிக்கிறது. எனினும், அந்த கட்சிகளுக்கு அறிக்கை நகல் அனுப்பி வைக்கப்படும். மேலும் அரசு இணையதளத்திலும் உடனடியாக சேர்க்கப்படும்.

இந்த அறிக்கை பற்றி உங்கள் கருத்துகளை தெரிவிக்க வேண்டுகிறேன். நடுநிலையான, பாரபட்சமற்ற எல்லோரும் ஏற்க கூடிய ஆலோசனைகளை நீங்கள் வழங்க வேண்டும். இதுகுறித்து திறந்த மனதுடன் விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது. இன்றை கூட்டம் ஒருபடி முன்னேற்றத்துக்கான அறிகுறியாக இருக்கிறது. அரசியல் கட்சியினர் மட்டுமன்றி, ஆந்திராவை சேர்ந்த தனிப்பட்ட யாரும் அறிக்கை பற்றி தங்கள் யோசனைகளை, பரிந்துரைகளை அளிக்கலாம். அதன்மூலம் நல்ல தீர்வு கிடைக்கும் என்று மத்திய அரசு நம்புகிறது. இவ்வாறு சிதம்பரம் பேசினார். ஸ்ரீகிருஷ்ணா அறிக்கையில் 6 பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.

 அவற்றின் விவரம்:
1. ஒருங்கிணைந்த ஆந்திரா தொடர வேண்டும்,
2. சீமந்தரா, தெலங்கானா என 2 ஆக பிரிக்கலாம்,
3. ராயல&தெலங்கானா, கடலோர ஆந்திரா என 2 ஆக பிரிக்கலாம்,
4. சீமந்தரா, தெலங்கானா என 2 ஆக பிரிக்கும் போது, ஐதராபாத்தை தனி யூனியன் பிரதேசமாக்கி எல்லைகளை விரிவுபடுத்தலாம்,
5. தெலங்கானா, சீமந்தரா என ஆந்திராவை 2 ஆக பிரிக்கலாம். தெலங்கானாவின் தலைநகராக ஐதராபாத்தை அறிவிக்கலாம். சீமந்தரா மாநிலத்துக்கு தனி தலைநகர் உருவாக்கலாம்,

6.ஆந்திராவை இப்போதுள்ள நிலையிலேயே வைக்கலாம். அதேசமயம் தெலங்கானா பகுதி மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு சட்டப்பூர்வ அதிகாரம் வழங்க வேண்டும். அதற்காக, தெலங்கானா கவுன்சில் உருவாக்கி சட்டப்பூர்வ அதிகாரம் வழங்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அறிக்கை வெளியான சில மணி நேரங்களில் ஆந்திராவில் பெரும் கலவரம் வெடித்தது.

தனி தெலங்கானா கோரி ஆந்திராவில் ஏராளமானோர் வன்முறையில் ஈடுபட்டனர். உஸ்மானியா பல்கலை.யில் ஏராளமான மாணவர்கள் திரண்டு ஊர்வலம் செல்ல முற்பட்டனர். அவர்களை பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தியதால் வன்முறையில் ஈடுபட்டனர். அரசு பஸ்களை தீ வைத்து கொளுத்தினர். இதில் உயரதிகாரி ஒருவர் உட்பட 6 போலீசார் படுகாயம் அடைந்தனர். பதற்றம் உருவான நிலையில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.


0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts