புதுதில்லி, ஜன. 4: போஃபர்ஸ் பீரங்கி பேரம் தொடர்பாக இத்தாலி வர்த்தகர் குவாத்ரோச்சிக்கு எதிரான வழக்கை முடித்துக்கொள்ள தில்லி நீதிமன்றத்தில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) செவ்வாய்க்கிழமை மீண்டும் வலியுறுத்தியது.
போஃபர்ஸ் பீரங்கி பேரம் தொடர்பாக வருமான வரி தீர்ப்பாயம் திங்கள்கிழமை அளித்த தீர்ப்பில் புதிதாக ஏதுமில்லை என்று அப்போது சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்திய ராணுவத்துக்கு போஃபர்ஸ் பீரங்கி வாங்கியதில் இந்திய தொழிலதிபர் வின்சத்தாவுக்கும் இத்தாலி வர்த்தகர் குவாத்ரோச்சிக்கும் ரூ. 41 கோடி கமிஷன் வழங்கப்பட்டுள்ளதை வருமான வரி தீர்ப்பாயம் உறுதிப்படுத்தி உள்ளது.
இந்தக் கமிஷன் தொகைக்கு உரிய வரியை அவர்கள் இருவரும் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பாயம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
இந்தத் தீர்ப்பு போஃபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியதாக கருதப்பட்டது. இதைத் தொடர்ந்து இத்தாலி வர்த்தகர் குவாத்ரோச்சிக்கு எதிரான வழக்கு நடைபெறும் தில்லி நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அஜய் அகர்வால் புதிய மனு தாக்கல் செய்தார். அதில், வருமான வரி தீர்ப்பாயத் தீர்ப்பின் அடிப்படையில் குவாத்ரோச்சிக்கு எதிரான வழக்கை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரினார். அத்துடன் இந்த வழக்கை முடித்துக் கொள்ள வேண்டும் என்று சிபிஐ தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
வருமான வரி தீர்ப்பாயத் தீர்ப்பின் அடிப்படையில் இந்த விஷயத்தை மத்திய அரசு புதிதாக ஆய்வு செய்யும் என்று சட்டத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதிலளித்த கூடுதல் சொலிட்டர் ஜெனரல் பி. பி.மல்ஹோத்ரா, வருமான வரி தீர்ப்பாயத் தீர்ப்பில் புதிதாக ஒன்றும் சொல்லப்படவில்லை என்று கூறினார்.
வருமான வரி தீர்ப்பாயத்தின் தீர்ப்பு குறித்து நான் கருத்து ஏதும் தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால், சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்ட விஷயங்கள்தான் வருமான வரி தீர்ப்பாயத் தீர்ப்பில் இடம் பெற்றுள்ளன என்றார்.
தீர்ப்பாயத் தீர்ப்பின் அடிப்படையில் புதிதாக ஆய்வு செய்யப்படும் என்று அமைச்சர் மொய்லி சொன்ன கருத்து குறித்து எனக்கு ஏதும் தெரியாது. ஆனால் எல்லா அம்சங்களையும் ஆய்வு செய்த பிறகுதான் குவாத்ரோச்சிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறும் மனுவை சிபிஐ தாக்கல் செய்துள்ளது என்றார் மல்ஹோத்ரா.
வழக்கின் தகுதி குறித்து இப்போது ஆராயக் கூடாது. இந்த வழக்கால் என்ன பயன் ஏற்படப் போகிறது என்று மட்டுமே பார்க்க வேண்டும் என்றும் அவர் வாதிட்டார்.
இதற்கு பதிலளித்த அகர்வால், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் குடும்பத்துக்கு வேண்டியவர் என்பதால் குவாத்ரோச்சியைக் காப்பாற்ற சிபிஐ முயல்கிறது என்று குற்றம்சாட்டினார். வழக்கை வாபஸ் பெறுவது என்ற சிபிஐயின் முடிவு பொது நலன் இல்லாதது என்றும் அவர் கூறினார்.
வாதத்தின் இடையே அகர்வாலின் தாயாருக்கு உடல் நலக் குறைவு என்று கூறி அனுமதி பெற்று சென்றதால், விசாரணை வரும் வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
போஃபர்ஸ் பீரங்கி பேரத்தில் கமிஷன் வழங்கப்பட்டதாக கூறப்படும் புகார் குறித்து விசாரிக்க 1990 ஜனவரி 20-ல் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. விசாரணை முடித்து 1999 அக்டோபர் 22-ல் ஒரு குற்றபத்திரிகையும் 2000 அக்டோபரில் 9-ல் மற்றொரு குற்றபத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டன.
இதில் 2009 அக்டோபர் 9-ல் குவாத்ரோச்சிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற சிபிஐ மனு தாக்கல் செய்தது. குவாத்ரோச்சியை இந்தியாவுக்கு கொண்டு வர முடியவில்லை என்பது உள்ளிட்ட சில காரணங்களின் அடிப்படையில் இந்த வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று சிபிஐ வலியுறுத்தியது. இதை எதிர்த்து வழக்கறிஞர் அஜய் அகர்வால் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட மற்ற எதிரிகளில் பலர் இறந்துவிட்டனர் அல்லது தில்லி உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுவிட்டனர்.
0 comments :
Post a Comment