மும்பை: மும்பை தாக்குதல் வழக்கில் பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாபுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்வது தொடர்பான வழக்கின் தீர்ப்பை மும்பை உயர் நீதிமன்றம் பிப்ரவரி 7ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் நடந்த தாக்குதலின்போது தீவிரவாதி கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான். அவனுக்கு மரண தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதை உறுதி செய்யக்கோரி மாநில அரசு தாக்கல் செய்த மனுவை மும்பை உயர் நீதிமன்றம் விசாரித்து வந்தது. மரண தண்டனையை எதிர்த்து கசாப் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவையும் உயர் நீதிமன்றம் விசாரித்தது.
மும்பை தாக்குதல் வழக்கில், தாக்குதல் நடத்தப்பட வேண்டிய இடங்களின் வரை படங்களை தயாரித்து அவற்றை லஷ்கர்&இ&தய்பா அமைப்பிடம் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்த பாஹிம் அன்சாரி மற்றும் சபாவுத்தீன் அகமது ஆகிய இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். இதை எதிர்த்தும் மாநில அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதையும் உயர் நீதிமன்றம் விசாரித்தது. இந்த விசாரணைகளில் இரு தரப்பு வாதங்கள் கடந்த வாரம் முடிவடைந்தன. இதையடுத்து இவற்றின் மீதான தீர்ப்பை பிப்ரவரி 7ம் தேதிக்கு ஒத்தி வைத்து இருப்பதாக வழக்கை விசாரித்த நீதிபதிகள் ரஞ்சன் தேசாய், ஆர்.வி.மோரே ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் நேற்று அறிவித்தது.
முன்னதாக இந்த வழக்கு விசாரணையின்போது, தீவிரவாதி கசாப் பல்வேறு தந்திரங்களை கையாண்டான். 2010ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி விசாரணை தொடங்கியது. வீடியோ கான்பரன்சிங் மூலமாக கசாபிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த கூறி, திடீரென கேமரா மீது எச்சிலை துப்பினான். ‘என்னை அமெரிக்காவுக்கு அனுப்பி வையுங்கள்’ என கத்தினான். இதையடு¢த்து, அவனை முறையாக நடந்துகொள்ளும்படி நீதிபதிகள் எச்சரித்தனர். கடந்த அக்டோபர் 21ம் தேதி நடந்த விசாரணையின்போது, நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக விரும்புவதாக தனது வழக்கறிஞர்களிடம் மீண்டும் வலியுறுத்தினான். கசாபும் அவனது கூட்டாளி அபு இஸ்மாயிலும் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டு இருக்கும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை நீதிபதிகள் அக்டோபர் 25&ம் தேதி பார்வையிட்டனர்.
0 comments :
Post a Comment