background img

புதிய வரவு

தேமுதிகவை அடகு வைக்கமாட்டேன்: சேலம் மாநாட்டில் விஜயகாந்த் சூளுரை

சேலம், ஜன. 9: தேமுதிகவை யாரிடமும் அடகு வைக்க மாட்டேன்; நமது ஆதரவு இல்லாமல் யாரும் வெற்றி பெற முடியாது என்றார் விஜயகாந்த்.
மக்கள் உரிமை மீட்பு மாநாடு என்ற பெயரில் தேமுதிக சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை மாநாடு நடத்தியது.




இதில் விஜயகாந்த் பேசியது:
ஏழைகள் இருக்கும்வரை இலவசங்கள் தொடரும் என்கிறார் முதல்வர் கருணாநிதி. ஆனால் திமுக அரசு இருக்கும் வரை ஏழைகள் இருப்பார்கள் என்பதுதான் உண்மை. ஊழல் இருப்பதால்தான் வறுமை நீடிக்கிறது. எனவே வறுமையை ஒழிக்க வேண்டும் என்றால் ஊழலை ஒழிக்க வேண்டும். அதைத்தான் நாங்கள் சொல்கிறோம்.




கருணாநிதி அரசு போடும் திட்டங்களின் பலன் மக்களுக்கு சென்று சேருவதைப் போல் தெரியும். ஆனால் கடைசியில் அதன் பலன் முழுவதும் கருணாநிதி குடும்பத்துக்குதான் சென்று சேருகிறது. இலவச தொலைக்காட்சிப் பெட்டி கொடுத்தோம் என்கிறார். ஆனால் அந்த டிவிகளுக்கு கொடுத்த கேபிள் இணைப்புகள் மூலம் யாருக்குப் பலன் கிடைத்தது?
அம்பேத்கர், கக்கன், ஜெகஜீவன்ராம் போன்ற தலைவர்களால் அந்தச் சமுதாயத்துக்கு பெருமை கிடைத்தது. ஆனால் ஊழல் செய்தவர்களை தலித் என்று கூறி காப்பாற்ற முயற்சிக்கிறார் கருணாநிதி.




மனு நீதியை மறுபிறவி எடுக்க விடமாட்டோம் என்கிறார் கருணாநிதி. உண்மையில் கருணாநிதியின் குடும்ப நீதிதான் இன்று மனு நீதியைப் போல் பிறவி எடுத்துள்ளது. அந்த மனு தர்மத்தைத்தான் இன்று ஒழிக்க வேண்டும். இளைஞர்களுக்கு வேலை கிடைத்தால்தான் மகிழ்ச்சி அடைவேன் என்கிறார். ஆனால் 5 முறை முதல்வராக இருந்தபோது ஏன் இதைச் செய்யவில்லை?
எனது தொலைபேசி ஒட்டு கேட்கப்படுகிறது: தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. குற்றச் செயல்களைத் தடுக்க வேண்டிய காவல்துறை இன்று மற்ற கட்சிக்காரனை வேவு பார்க்கும் வேலையைச் செய்கிறது. எனது தொலைபேசி கூட ஒட்டுக் கேட்கப்படுகிறது. சட்டம், ஒழுங்கு சீரழிந்து பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் கூட படுகொலை செய்யப்படும் அவல நிலை உள்ளது. காவல்துறையின் இந்த ஆட்டம் வெறும் 4 மாதங்கள் மட்டுமே. காவல்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் விரைவிலேயே மாற்றி அமைக்கப்படும்.


ஒரு முருங்கைக்காய் 11 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது குறித்து கேட்டால் ஒரு கிலோ அரிசி 1 ரூபாய்க்குக் கொடுக்கிறோம் என்கிறார். இவர்கள் தரும் அரிசி கால்நடைகளுக்கும் கடத்தல்காரர்களுக்கும்தான் பயன்படுகிறது. மாறி மாறிப் பேசுவதில் கருணாநிதி வல்லவர். முன்பு வெறும் மஞ்சள் பையைத் தூக்கிக் கொண்டு சென்னைக்கு வந்தவன் நான் என்றார். இப்போது கிராமத்தில் திருடர்கள் கொள்ளையடிக்கும் அளவுக்கு வசதி உடைய வீட்டில்தான் பிறந்தேன் என்கிறார்.






""ஊழலுக்கு நான் நெருப்பு'' என்கிறார். உண்மையில், ""ஊழலுக்கு நான் பொறுப்பு'' என்றுதான் கூறியிருக்க வேண்டும். காமராஜர் கல்வி கொடுத்தார். எம்.ஜி.ஆர். சத்துணவு கொடுத்தார். கருணாநிதியோ ஊழலை மட்டுமே செய்கிறார்.


தமிழர்களின் உரிமையைக் கடுகளவும் விட்டுக்கொடுக்க மாட்டேன் என்கிறார். ஆமாம் கடுகளவு அல்ல கடலளவுதான் விட்டுக் கொடுப்பார். கச்சத்தீவு, இலங்கைத் தமிழர் படுகொலை என பல உதாரணங்களைச் சொல்லலாம்.
அரக்கன் கம்சனை கிருஷ்ண பரமாத்மா வீழ்த்தினார். கருணாநிதி ஆட்சி என்ற அரக்கனை வீழ்த்தும் கிருஷ்ண பரமாத்மாக்களாக தமிழக மக்கள் முன்வர வேண்டும். தேர்தல் கூட்டணி பற்றி நான் என்ன சொல்வேன் என்பதைக் கேட்க எல்லோரும் ஆவலாக உள்ளனர்.




அரக்கன் ஆட்சியை வீழ்த்த நாம் கூட்டணி வைக்க வேண்டுமா? வேண்டாமா? வேண்டும் என்று விரும்புவோர் கையைத் தூக்குங்கள் (பெரும்பான்மையானோர் கையைத் தூக்கினர்).




சட்ட சபையில் ஆம் என்று கூறுவோரே அதிகமாக இருப்பதால் இது நிறைவேற்றப்படுகிறது என்று கூறுவார்கள். ஆனால் இப்போது கூட்டணி விஷயத்தை நான் பார்த்துக் கொள்கிறேன். கூட்டணி பற்றியோ, கட்சி வளர்ச்சி பற்றியோ யாரும் கவலைப்பட வேண்டாம். கூட்டணி பற்றி முடிவு செய்ய எனக்கு செயற்குழு, பொதுக்குழுவில் அதிகாரம் அளித்துள்ளீர்கள், அந்தக் கடமையை நான் சரியாக நிறைவேற்றுவேன்.




எனினும் கட்சியையோ கட்சித் தொண்டர்களையோ யாரிடமும் அடகு வைக்க மாட்டேன். சொத்துகளை இழந்தாலும் தொண்டர்களின் தன்மானத்தை இழக்க விடமாட்டேன். எத்தனையோ கட்சிகள் பிற கட்சிகளிடம் அடிமைகளாக உள்ளனர். நான் உங்களை யாரிடமும் அடிமையாக்க மாட்டேன். நம் கட்சியின் ஆதரவு இல்லாமல் யாரும் வெற்றி பெற முடியாது. நம் ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது' என்றார் விஜயகாந்த்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts