சென்னை : ""மருத்துவப் பட்டம் பெறும் மாணவர்கள், பணியை துவங்கும்போது, நகரப் பகுதிகளில் மட்டுமல்லாது, கிராமப்புறங்களுக்கும் சென்று ஏழை, எளியோருக்கு பணியாற்றுங்கள்,'' என துணை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலைக் கழகத்தின் 21வது பட்டமளிப்பு விழா, சென்னையில் நேற்று நடந்தது. விழாவில், நரம்பியல் டாக்டர்கள் நாகராஜன், சீனிவாசன், சிறுநீரகவியல் டாக்டர் சிவராமன், இதய நோய் டாக்டர் விஸ்வகுமார், சர்க்கரை நோய் டாக்டர் மோகன், பொது மருத்துவ டாக்டர்கள் கோபால், சபாரத்தினம் ஆகிய ஏழு பேருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.மேலும் 544 பேர் எம்.பி.பி.எஸ்., 331 பேர் பி.டி.எஸ்., 1,407 பேர் பி.எஸ்சி., நர்சிங், 1,176 பேர் பி.பார்மசி உட்பட 5,136 பேர் பட்டங்களை பெற்றனர். கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா, பட்டங்களை வழங்கினார்.
பட்டமளிப்பு விழா உரையாற்றிய துணை முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:இந்த நூற்றாண்டுகளின் குறிக்கோள், கல்வியும் சுகாதாரமும். எந்த ஒரு நாடும், சுகாதாரக் கல்வியை புறக்கணித்து விட்டு, வளர்ச்சிப் பாதையில் முன்னேறி விட முடியாது. நம் நாட்டில் சுகாதாரத் துறை, பல கடுமையான சோதனைகளை, சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது. இன்று தமிழகத்தில் சுகாதாரத் துறை மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றுள்ளது.நீங்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தபோது உங்களுடைய நோக்கம், இச்சமுதாயத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்பதாக இருந்தது. வாழ்வாதாரமும், கால மாற்றங்களும், சூழ்நிலைகளும், மனிதரின் கொள்கைகளை, எண்ணங்களை விழுங்கி விடுகிறது. அந்த உறுதி இன்று அவ்வளவு பேரிடமும் அப்படியே இருக்கிறதா என்றால், கேள்விக்குறி தான்.இந்த ஆண்டு பெரம்பலூர், சிவகங்கை மருத்துவக் கல்லூரிகளில் தலா 100 மாணவர்கள் சேர்க்கையுடன் கல்லூரி துவங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
மருத்துவ மாணவர்கள் படிக்கும்போது, நோயாளிகளை பல்வேறு வகையில் கேள்வி கேட்டு பரிசோதித்து, அவர்களிடமிருந்து தான் மருத்துவம் கற்றுக் கொள்கின்றனர்.அவ்வாறு ஒத்துழைக்கும் நோயாளிகளுக்கு டாக்டர்கள் நன்றி செலுத்திட ஒரே வாய்ப்பு, மருத்துவப் பட்டம் பெற்ற பின், கிராமப்புறங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் வரும் நோயாளிகளுக்கு உரிய முறையில் சிகிச்சை செய்வதாகும்.ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து, புதிய ஆராய்ச்சிகளில் ஈடுபட மக்கள் நல்வாழ்வுத் துறையும், மருத்துவத் துறை நிபுணர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான முயற்சியில் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும்.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலை துணைவேந்தர் மயில்வாகனன் நடராஜன் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment