டர்பன்: டர்பனில் நடந்த "டுவென்டி-20' போட்டியில் ரோகித் சர்மாவின் அதிரடி அரைசதம் கைகொடுக்க, இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
டர்பனில் இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதிய ஒரே ஒரு "டுவென்டி-20' போட்டி நடந்தது. இந்திய அணியில் சச்சின், ஜாகிர், ஹர்பஜன், ஸ்ரீசாந்த் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. டாஸ் வென்ற கேப்டன் தோனி, பேட்டிங் தேர்வு செய்தார்.
துவக்க வீரர்களாக முரளி விஜய், விராத் கோஹ்லி களமிறங்கினர். பார்னல் வீசிய முதல் ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்த விஜய்(14) அதிக நேரம் நீடிக்கவில்லை.
ரோகித் அரைசதம்:
அடுத்து வந்த ரோகித் சர்மா அதிரடியாக ஆடினார். நிடினி வீசிய போட்டியின் 5வது ஓவரில் 1 பவுண்டரி, 1 சிக்சர் அடித்தார். இதே ஓவரில் விராத் கோஹ்லியும் 2 பவுண்டரி அடிக்க, மொத்தம் 20 ரன்கள் கிடைத்தது. போத்தா சுழலில் விராத் கோஹ்லி(28) வீழ்ந்தார். இம்முறை ஐ.பி.எல்., ஏலத்தில் மும்பை அணிக்காக ரூ. 9.07 கோடிக்கு வாங்கப்பட்ட ரோகித் சர்மா, தனது அசத்தல் ஆட்டத்தை தொடர்ந்தார். போத்தா வீசிய 12வது ஓவரில் 2 பவுண்டரி மற்றும் ஒரு இமாலய சிக்சர் விளாசினார். அதிரடியாக அரைசதம்(53) கடந்த இவர், டுமினி வலையில் சிக்கினார். பின் பீட்டர்சன் "வைடாக' வீசிய பந்தில் ஒரு ரன் எடுக்க ஓடிய யுவராஜ்(12), வீணாக ரன் அவுட்டானார்.
இதற்கு பின் வந்த சுரேஷ் ரெய்னா வாணவேடிக்கை காட்டினார். திரான் ஓவரில் அடுத்தடுத்து ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்தார். நிடினி பந்திலும் ஒரு அசத்தல் சிக்சர் அடித்தார். கோல்கட்டா அணிக்காக ரூ. 9.66 கோடிக்கு வாங்கப்பட்ட யூசுப் பதான்(6) ஏமாற்றினார். திரான் வீசிய கடைசி ஓவரிலும் சிக்சர் விளாசிய ரெய்னா 41 ரன்களுக்கு வெளியேறினார். இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்தது. நிதானமாக ஆடிய தோனி(10) அவுட்டாகாமல் இருந்தார்.
அதிவேக அரைசதம்:
சவாலான இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு, துவக்க வீரராக வந்த ஆம்லா(1) ஏமாற்றினார். இங்ராம்(2) தாக்குப்பிடிக்கவில்லை. ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுபக்கம் அசத்தினார் மார்ன் வான் விக். அதிரடியாக ஆடிய இவர் முனாப், அஷ்வின் பந்துவீச்சில் பவுண்டரி, சிக்சர் மழை பொழிந்தார். இவர் 24 பந்துகளில் அரைசதம் எட்டினார். இதன் மூலம் "டுவென்டி-20' அரங்கில் அதிவேக அரைசதம் அடித்த தென் ஆப்ரிக்க வீரர் என்ற பெருமை பெற்றார். டிவிலியர்ஸ்(14) ரன் அவுட்டானார். யுவராஜ் சுழலில் டுமினி(0) வெளியேறினார். சிறிது நேரத்தில் பிரவீண் குமார் வேகத்தில் வான் விக்(67) அவுட்டாக, இந்தியாவுக்கு நிம்மதி பிறந்தது. யூசுப் வலையில் மில்லர்(10), ராபின் பீட்டர்சன்(2) சிக்கினார்.
அஷ்வின் துல்லியம்:
கடைசி 12 ஓவரில் தென் ஆப்ரிக்காவின் வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரை துல்லியமாக வீசிய தமிழக வீரர் அஷ்வின் 2 ரன் மட்டும் கொடுத்து பார்னல்(14) விக்கெட்டையும் கைப்பற்றினார். இதையடுத்து கடைசி ஓவரில் 27 ரன்கள் தேவைப்பட்டது. இம்முறை நெஹ்ரா அசத்தலாக பந்துவீச, தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 147 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. அபார வெற்றி பெற்ற இந்திய அணி கோப்பையை தட்டிச் சென்றது.
ஸ்கோர் போர்டு
இந்தியா
கோஹ்லி(ப)போத்தா 28(19)
விஜய்(கே)வான் விக்(ப)பார்னல் 14(12)
ரோகித்(கே)நிடினி(ப)டுமினி 53(34)
யுவராஜ்-ரன் அவுட்-(பீட்டர்சன்/டிவிலியர்ஸ்) 12(13)
யூசுப்(ப)திரான் 6(8)
ரெய்னா(கே)மில்லர்(ப)திரான் 41(23)
தோனி-அவுட் இல்லை- 10(11)
உதிரிகள் 4
மொத்தம்(20 ஓவரில் 6 விக்.,) 168
விக்கெட் வீழ்ச்சி: 1-18(விஜய்), 2-67(கோஹ்லி), 3-109(ரோகித்), 4-110(யுவராஜ்), 5-136(யூசுப்), 6-168(ரெய்னா).
பந்துவீச்சு: பார்னல் 4-0-25-1, நிடினி 4-0-46-0, திரான் 4-0-39-2, பீட்டர்சன் 3-0-20-0, போத்தா 3-0-25-1, டுமினி 2-0-12-1.
தென் ஆப்ரிக்கா
வான் விக்(கே)நெஹ்ரா(ப)பிரவீண் 67(39)
ஆம்லா(ப)நெஹ்ரா 1(3)
இங்ராம்(கே)பிரவீண்(ப)முனாப் 2(8)
டிவிலியர்ஸ்-ரன் அவுட்(ரெய்னா/நெஹ்ரா) 14(10)
டுமினி-எல்.பி.டபிள்யு.,(ப)யுவராஜ் 0(2)
மில்லர்-எல்.பி.டபிள்யு.,(ப)யூசுப் 10(8)
போத்தா(கே)ரோகித்(ப)நெஹ்ரா 25(22)
பீட்டர்சன்(கே)கோஹ்லி(ப)யூசுப் 2(6)
பார்னல்(கே)யூசுப்(ப)அஷ்வின் 14(16)
திரான்-அவுட் இல்லை- 1(4)
நிடினி-அவுட் இல்லை- 1(2)
உதிரிகள் 10
மொத்தம் (20 ஓவரில் 9 விக்.,) 147
விக்கெட் வீழ்ச்சி: 1-6(ஆம்லா), 2-31(இங்ராம்), 3-88(டிவிலியர்ஸ்), 4-89(டுமினி), 5-93(வான் விக்), 6-108(மில்லர்), 7-120(பீட்டர்சன்), 8-141(பார்னல்), 9-144(போத்தா).
பந்து வீச்சு: பிரவீண் குமார் 3-0-17-1, நெஹ்ரா 4-0-22-2, முனாப் படேல் 2-0-26-1, அஷ்வின் 4-0-33-1, யுவராஜ் 4-0-20-1, யூசுப் பதான் 3-0-22-2.
0 comments :
Post a Comment