லண்டன், ஜன. 2: இங்கிலாந்து அணி இப்போது அபாரமாக விளையாடி வருவதாக ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே புகழாரம் சூட்டியுள்ளார்.இது குறித்து டெலிகிராப் பத்திரிகையில் அவர் மேலும் கூறியுள்ளது: கடந்த ஓராண்டாக இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இதனால் உலகின் முன்னணி அணியாகத் திகழ வேண்டும் என்ற அந்த அணியின் விருப்பத்தை நெருங்கி வருகிறார்கள் என்றே கூற வேண்டும்.ஆஷஸ் டெஸ்ட் தொடரில் அவர்களின் ஆட்டம் அற்புதமாக இருந்து வருகிறது. ஆஷஸ் கோப்பையை தக்க வைத்துக் கொண்டுள்ளது அந்த அணிவீரர்களின் நம்பிக்கையும், அணி மீது ரசிகர்கள் வைத்துள்ள நம்பிக்கையையும் அதிகரித்துள்ளது. எனினும் அணியில் மேலும் சில மாற்றங்களைக் கொண்டு வருவது அவசியம். உள்நாட்டில் நடைபெற்று வரும் கவுண்டி போட்டிகளில் மாற்றம் கொண்டுவருவதன் மூலம் மேலும் திறமையான வீரர்களை உருவாக்க முடியும். கவுண்டி கிரிக்கெட்டில் 18 அணிகள் என்ற பழமையான முறை உள்ளது. இதனை மாற்றி 10 அணிகளை வைத்து விளையாட வேண்டும். இந்த மாற்றம் கடினமானதுதான் என்றாலும், சிறப்பாக பலனளிக்கும்.இங்கிலாந்து அணியின் இயக்குநராக உள்ள ஆண்டி ஃபிளவருக்கும், அணியின் முன்னேற்றத்தில் சிறப்பான பங்களிப்பு உள்ளதை மறுக்க முடியாது என்று வார்னே கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment