background img

புதிய வரவு

துரோகிகளை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்-வைகோ



சென்னை: தமிழ் ஈழப் பகைவர்களின் கைக்கூலியாகச் செயல்பட்ட ஈஎன்டிஎல்எஃப் இயக்கத்தைச் சேர்ந்த சிலர், ஸ்ரீபெரும்புதூரில் இருந்து டெல்லிக்கு நடைப்பயணம் போகவும், பொய்களைப் பரப்புரை செய்யவும் திட்டமிட்டுள்ளதோடு, டெல்லியில் காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்து, ஈழத் தமிழர் என்ற போர்வையில் தமிழ் ஈழ விடுதலைக்கு உண்மையில் போராடுவோரைக் கொச்சைப்படுத்தவும், தமிழ் இனத்துக்கு இழிவைத் தரும் காரியங்களில் ஈடுபடவும் முற்பட்டு உள்ளனர் என்றும்,


தாய்த் தமிழக தமிழர்களும், உலகம் முழுவதும் உள்ள புலம் பெயர்ந்த தமிழ் ஈழ மக்களும், துரோகிகளை அடையாளம் கண்டுகொள்ளவும், மோசடி முயற்சிகளை முறியடிக்கவும் விழிப்புணர்வுடன் செயலாற்ற வேண்டும் என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.


அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் ஈழ மக்களின் துயரமும் தியாகமும் நிறைந்த கண்ணீர் வரலாற்றில், காக்கைவன்னியன்களும், கருணாக்களும், தொடர்ந்து துரோகம் இழைப்பவர்களும் தமிழ் ஈழ விடுதலை விரும்பிகளால் அடையாளம் காணப்பட வேண்டும்.


சோனியா காந்தி இயக்கும் இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆயுதங்களும் ஆயிரமாயிரம் கோடிப் பணமும் கொடுத்து, இந்தியாவின் முப்படைத் தளபதிகளையும் இலங்கைக்கு அனுப்பி, தமிழர் அழிப்பு யுத்தத்தை இயக்கியது மன்னிக்க முடியாத கொடிய துரோகம்.


லண்டன் சேனல் 4 தொலைக்காட்சி, 2010 டிசம்பர் 30ல் வெளியிட்ட காணொளிக் காட்சிகள், தமிழர் நெஞ்சில் நெருப்பைப் போட்டு துடிக்கச் செய்கின்றன. பிரித்தானியத் தமிழர்கள் கொட்டும் பனியில் பல்லாயிரக்கணக்கில் திரண்டு, ராஜ பட்சவை லண்டனை விட்டு ஓடச் செய்தனர். உலகின் மனச்சாட்சி இப்பொழுதுதான் தமிழர் துயரத்தை உணரத் தொடங்கி உள்ளது.


இச்சூழலில் இந்தியாவின் மத்தியில் ஆட்சிக்குத் தலைமை தாங்கும் காங்கிரசின் தலைமை ஈழத் தமிழர்க்குச் செய்த துரோகத்தை மூடி மறைக்கவும், உண்மைகளைப் புதைக்குழிக்கு அனுப்பவும், பொய்ப் பிரசாரத்தை அவிழ்த்து விடவும், இந்திய உளவுத்துறையின் ஏற்பாட்டில் ஒரு கூட்டம் ஒரு திட்டத்தை வகுத்துள்ளது.


தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக எண்ணற்ற துரோகங்களைச் செய்து, தமிழ் ஈழப் பகைவர்களின் கைக்கூலியாகச் செயல்பட்ட ஈஎன்டிஎல்எஃப் இயக்கத்தைச் சேர்ந்த சிலர், ஸ்ரீபெரும்புதூரில் இருந்து டெல்லிக்கு நடைப்பயணம் போகவும், பொய்களைப் பரப்புரை செய்யவும் திட்டமிட்டுள்ளதோடு,


டெல்லியில் காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்து, ஈழத் தமிழர் என்ற போர்வையில் தமிழ் ஈழ விடுதலைக்கு உண்மையில் போராடுவோரைக் கொச்சைப்படுத்தவும், தமிழ் இனத்துக்கு இழிவைத் தரும் காரியங்களில் ஈடுபடவும் முற்பட்டு உள்ளனர்.


தாய்த் தமிழகத்துத் தமிழர்களும், உலகெங்கும் உள்ள புலம் பெயர்ந்த தமிழ் ஈழ மக்களும் துரோகிகளை அடையாளம் கண்டு கொள்ளவும், இந்த மோசடி முயற்சிகளை ஆரம்பத்திலேயே முறியடிக்கவும் மிக்க விழிப்பு உணர்வுடன் செயலாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார் வைகோ.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts