டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ போன்ற ஐ.டி. பெரு நிறுவனங்களின் கிடு கிடு வளர்ச்சியால், தங்களிடம் உள்ள பணியாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதாக சிறிய மற்றும் நடுத்தர ஐ.டி. நிறுவனங்கள் மிகுந்த கவலையடைந்துள்ளன.
மந்தமாகி கிடந்த தகவல் தொழில் நுட்பத் துறை, மீண்டும் பழைய வேகத்துடன் வளர்ச்சியடைந்து வருகிற நிலையில் டிசிஎஸ், விப்ரோ, இன்ஃபோசிஸ், ஹெச்சிஎல் மற்றும் ஐபிஎம் போன்ற ஐடி பெரு நிறுவனங்களுக்கு அயல்நாடுகளிலிருந்து பெரிய 'புராஜக்ட்'கள் (வேலைகள்) ஏராளமாக வந்து குவியத் தொடங்கிவிட்டன.
இதனால் கூடுதலான பணியாளர்கள் தேவைப்படும் நிலை ஏற்பட்டதால், கல்லூரிகளில் கடைசி ஆண்டு பயிலும் மாணவர்களை 'கேம்பஸ் இண்டர்வியூ' மூலம் பணியில் அமர்த்த தொடங்கியுள்ளன இந்நிறுவனங்கள்.
அதே சமயம் இவர்களை பயிற்சியாளர்களாக மட்டுமே முதலில் பயன்படுத்த முடியும் என்பதால், சிறு மற்றும் நடுத்தர ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் அனுபவம் உள்ள பணியாளர்களை அதிக சம்பள ஆசை காட்டி இழுக்கத் தொடங்கியுள்ளன டிசிஎஸ் போன்ற ஐ.டி. ஜாம்பவான் நிறுவனங்கள்!
இதனால் கடந்த 6 மாத காலங்களில் சிறு மற்றும் நடுத்தர ஐ.டி. நிறுவனங்களிலிருந்து பெரிய நிறுவனங்களுக்கு தாவும் பணியாளர்களின் எண்ணிக்கை கிடு கிடுவென அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக சிறிய மற்றும் நடுத்தர ஐ.டி. நிறுவனங்களின் 25 முதல் 30 விழுக்காடு வரை தேய்வு விகிதத்தை எதிர்கொண்டுள்ளதாகவும், இது குறித்து அந்நிறுவனங்கள் கடும் பீதியடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
வழக்கமாக பெரிய நிறுவனங்கள் வளர்ச்சியை நோக்கி செல்லும்போது, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தேய்மான விகிதம், சமாளிக்கத்தக்க வகையில், சராசரியாக 14 முதல் 17 விழுக்காடாகத்தான் இருக்கும்.ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள தேய்மான விகிதம் அதைக்காட்டிலும் அதிகமாக உள்ளதால்தான், சிறிய, நடுத்தர ஐ.டி. நிறுவனங்கள் அச்சத்திற்கு ஆளாகி உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது சர்வதேச அளவில் ஐ.டி. துறை பீடு நடைபோடத் தொடங்கியுள்ள நிலையில், இந்த வளர்ச்சியை தங்களுக்கு சாதமாக்கிக் கொள்ள இந்திய பெரு ஐ.டி. நிறுவனங்கள் துடிதுடியாய் துடிக்கின்றன.
இதன் காரணமாகத்தான் கிடைத்திருக்கும் மிகப்பெரிய 'புராஜக்ட்'களை செய்து முடிக்க சிறிய ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை அதிக சம்பளம், இதர படிகள், ஊக்கத்தொகை, எதிர்காலத்தில் சிறப்பான வளர்ச்சி என்றெல்லாம் ஆசை காட்டி தங்கள் பக்கம் ஏகமாய் இழுத்துபோட்டுக்கொண்டிருக்கின்றன.
"பெரிய கம்பெனியில் வேலை, வளமான எதிர்காலம், கை நிறைய சம்பளம்..." என்று கண்முன்னே வாய்ப்பு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்காத குறையாக கூப்பிடும்போது, எந்த ஊழியர்தான் தாவாமல் இருப்பார்? அதுதான் தாவி விடுகின்றனர்" என்கிறார் தனியார் கன்சல்டண்ட் நிறுவனம் ஒன்றின் தலைமை அதிகாரி ரமேஷ்.
"இதுபோன்ற ஆட்களை அள்ளிக்கொண்டு போவதெல்லாம் பெரும்பாலும் நடுத்தர ரக நிறுவனங்களிலிருந்துதான்.அங்குதான் பெரிய ஐ.டி. நிறுவனங்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, 4 முதல் 8 ஆண்டுகள் வரை பணி அனுபவமும், தாவுவதற்கு சரியான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியும் இருக்கிற பணியாளர்கள் கிடைப்பார்கள்.
எனவேதான் இவ்வாறு ஊழியர்கள் 'ஜம்ப்' ஆகும்போது நடுத்தர நிறுவனங்கள் சில மாதங்களுக்கு தடுமாறி போய்விடுகின்றன" என்கிறார் பணியாளர்களை அமர்த்திக்கொடுக்கும் அடோகோ இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சுதாகர்.
நிறுவனங்கள் தங்களுக்கேற்ற பணியாளர்களை தேடுவது எவ்வளவு நியாயமானதோ, அதே அளவு நியாயம் அதிக சம்பளத்திற்கு பணியாளர்கள் தாவுவதிலும் உள்ளது.
எனவே எத்தகைய நிலையையும் எத்ர்கொள்ள அல்லது சமாளிக்கும் திறன்கொண்ட நிறுவனங்களாக நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்கள் தங்களை தயார்படுத்திக்கொண்டால்தானே, நாளை அவர்களும் இதே பெரு நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெற முடியும்!
0 comments :
Post a Comment