background img

புதிய வரவு

கவர்னர் பரத்வாஜை திரும்பப் பெறுங்கள் : ஜனாதிபதியிடம் பா.ஜ., தலைவர்கள் மனு


புதுடில்லி : "கர்நாடக கவர்னர் பரத்வாஜ் அரசியல் சட்டத்திற்கு விரோதமாக செயல்படுகிறார். எனவே, அவரை உடனே திரும்பப் பெற வேண்டும்' என, ஜனாதிபதி பிரதிபா பாட்டீலிடம், பா.ஜ., தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி தலைமையில், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் அருண்ஜெட்லி மற்றும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 23 எம்.பி.,க்கள் நேற்று ஜனாதிபதி பிரதிபா பாட்டீலை சந்தித்தனர். அவரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில், "கர்நாடகாவில் எடியூரப்பா அரசுக்கு எதிராக, அம்மாநில கவர்னர் பரத்வாஜ் கடுமையாக நடந்து கொள்கிறார். கவர்னராக பதவியேற்றது முதல் அங்குள்ள ஆட்சியை சீர்குலைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுகிறார். அவரை கவர்னர் பதவியிலிருந்து திரும்ப அழைக்க வேண்டும். அங்கு அரசியல் சட்ட பணிகள் சரியாக செயல்பட அனுமதிக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர். எடியூரப்பாவுக்கு எதிராக ஊழல் தொடர்பாக தனிநபர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், அவர் மீது வழக்கு தொடர கவர்னர் அனுமதி வழங்கியது சரியல்ல என்றும் ஜனாதிபதியிடம் கூறினர்.
இந்தச் சந்திப்பிற்குப் பின்னர் நிருபர்களிடம் பேசிய அத்வானி கூறியதாவது: அரசியல் சட்டத்திற்கு அப்பாற்பட்டு செயல்படும், மாநில அரசுடன் மோதல் போக்கை கடைபிடிக்கும் கவர்னர் பரத்வாஜை திரும்பப் பெற வேண்டும் என, ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தோம். தனது அரசியல் திட்டத்தை நிறைவேற்ற, கவர்னர் எப்படி எல்லாம் மாநில அரசுக்கு எதிராக செயல்படுகிறார் என்பதையும் விவரித்தோம். அவர் ஒரு அரசியல் சட்ட ரீதியான பொறுப்பு வகிக்கும் நபரைப் போல இல்லாமல், காங்கிரஸ் கட்சிக்காரர் போல செயல்படுகிறார். இவ்வாறு அத்வானி கூறினார்.
பாரதிய ஜனதா கட்சியின் மற்றொரு மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கூறுகையில், ""கவர்னர் பரத்வாஜை காங்கிரஸ் கட்சி ஒரு கருவியாக பயன்படுத்துகிறது. கர்நாடகாவில் நிகழும் சம்பவங்கள் அனைத்திற்கும் காங்கிரஸ் கட்சியின் சதியே காரணம். அந்தக் கட்சியின் திட்டங்களைத்தான் கவர்னர் நிறைவேற்றுகிறார். கவர்னர் இவ்வாறு நடந்து கொண்டால், ஓட்டளித்த மக்களுக்கு எதிராக செயல்பட்டால், அரசியல் சட்ட ரீதியான தனது கடமையைச் செய்யத் தவறினால், நாட்டில் குழப்பம்தான் ஏற்படும்,'' என்றார்.
ஜனாதிபதியிடம் கொடுத்த மனுவில், ""முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக கவர்னர் பரத்வாஜ் சமீபத்தில் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இவை எல்லாம் கவர்னர் தயாரித்தது அல்ல. எதிர்க்கட்சித் தலைவர்களால் தயாரிக்கப்பட்டவை. இந்த விவரங்களை சில மாதங்களுக்கு முன், பிரதமர் மன்மோகன் சிங்கிடமும் தெரிவித்துள்ளோம்' என்றும் கூறியுள்ளனர்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் சரத்யாதவ் கூறுகையில், ""கவர்னர் பரத்வாஜின் செயல்பாடு சரியானதல்ல. கவர்னர் அலுவலகத்திற்குரிய கவுரவத்தை மீறி அவர் செயல்படுகிறார். அவர் வரம்பிற்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என, ஜனாதிபதி அறிவுறுத்த வேண்டும். அதேநேரத்தில், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான முதல்வர் எடியூரப்பா தொடர்பாக சில ஆலோசனைகளை பாரதிய ஜனதா கட்சிக்கு நான் வழங்கியுள்ளேன்,'' என்றார்.




0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts