background img

புதிய வரவு

பி.ஏ.சி. முன்பு பிரதமர் ஆஜராக வேண்டாம்: பிரணாப் முகர்ஜி


கொல்கத்தா, ஜன. 2: 2-ஜி அலைக்கற்றை ஊழல் புகார் தொடர்பான விசாரணைக்கு பொது கணக்குக் குழு ( பிஏசி) முன்பு பிரதமர் ஆஜராகுவதை ஏற்க முடியாது. இதுபற்றி எங்களைக் கலந்தாலோசிக்காமல் பிரதமர் அறிவித்துவிட்டார் என்று நிதியமைச்சரும் மக்களவை முன்னவருமான பிரணாப் முகர்ஜி கூறினார்.

2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேடு குறித்து இப்போது பொது கணக்குக் குழு விசாரித்து வருகிறது. அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் அலுவலகத்துக்கும் முன்னாள் அமைச்சர் ராசாவுக்கும் இடையே நடந்த தகவல் பறிமாற்றம், கொள்கை முடிவுகள் பற்றி பொது கணக்குக் குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்கத் தயாராக உள்ளேன் என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார். பிரதமரின் இந்த அறிவிப்புக்கு மத்திய நிதியமைச்சரும் மூத்த அமைச்சர்களில் ஒருவருமான பிரணாப் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில காங்கிரஸ் கமிட்டி சிறப்புக் கூட்டத்தில் இது குறித்து அவர் பேசியது:

அரசியல் சட்டப்படி பிரதமர் ஒட்டுமொத்த நாடாளுமன்றத்துக்குப் பதிலளிக்க வேண்டியவரே தவிர நாடாளுமன்ற குழுக்களுக்குப் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை.

பொது கணக்குக் குழு முன் ஆஜராகத் தயார் என்று என்னைக் கலந்தாலோசிக்காமல் பிரதமர் அறிவித்துவிட்டார். என்னிடம் ஆலோசனை கேட்டிருந்தால் அதுபோன்று அறிவிக்க வேண்டாம் என்று தடுத்திருப்பேன்.

பொது கணக்குக் குழு முன்பு ஒரு அமைச்சர் கூட ஆஜராக தேவையில்லை. ஏனெனில் அமைச்சர் என்பவர் ஒட்டுமொத்த நாடாளுமன்றத்துக்குப் பதில் சொல்ல கடமைப்பட்டவர்.

இதற்கு முன் மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்தபோது, ஹர்ஷத் மேத்தா பங்கு சந்தை மோசடி தொடர்பான விசாரணைக்காக நாடாளுமன்ற கூட்டுக் குழு முன்பு அவர் ஆஜரானார்.

இப்போது பொது கணக்குக் குழு முன்பு ஆஜராகத் தயார் என்று பிரதமர் அறிவித்திருப்பது ஏதோ அவர் பயத்தில் அதுபோன்று அறிவித்துவிட்டார் என்று எண்ண வேண்டாம். அவரது மடியில் கனம் இல்லை. எந்த கேள்விக்கும் எந்த விசாரணைக்கும் தயாராக இருக்கிறேன் என்பதைச் சொல்வதற்காகத்தான் அவர் அவ்வாறு அறிவித்துள்ளார்.

2-ஜி அலைக்கற்றை குறித்து விசாரிக்க நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட வேண்டிய அவசியம் என்ன என்பதை எதிர்க்கட்சிகள் விளக்க வேண்டும். அதேநேரத்தில், தேவையில்லை என்பதை விளக்க நான் தயாராக உள்ளேன் என்றார் பிரணாப்.

இதற்கிடையே பிரதமரின் அறிவிப்பு குறித்து மற்ற உறுப்பினர்களிடம் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்று பொது கணக்குக் குழு தலைவரும் பாஜக மூத்த தலைவருமான முரளி மனோகர் ஜோஷி கூறியுள்ளார்.

நாடாளுமன்ற விதிமுறைகளின்படி பொது கணக்குக் குழு விசாரணைக்காக ஒரு அமைச்சரையோ பிரதமரையோ அழைக்க முடியாது. ஆனால் பிரதமர் மன்மோகன் விஷயத்தில் அவர் தானே முன்வந்து அறிவித்திருப்பதால் விசாரணைக்கு அவரை அழைக்க வாய்ப்புள்ளது.

அவ்வாறு பொது கணக்குக் குழு முன்பு மன்மோகன் சிங் ஆஜரானால் இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் பொது கணக்குக் குழு முன் ஆஜரான முதல் பிரதமர் மன்மோகன் சிங்காகத்தான் இருப்பார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts