கூடலூர் : சபரிமலை அருகே பக்தர்கள் கூட்டத்தில் புகுந்த ஜீப் 60 அடி பள்ளத்தில் விழுந்தது.இந்த விபத்தில் 75 பேர் பலியாகியிருப்பார்கள் என அஞ்சப்படுகிறது. சபரிமலையில் 14ம் தேதி மகரஜோதி பெருவிழா நடந்தது. ஜோதியை பார்க்க லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தனர். புல்மேடு, உப்புப்பாறை பகுதியில் இருந்தும் மகர ஜோதியை பக்தர்கள் பார்த்தனர். நேற்று இரவு ஜோதியை பார்த்துவிட்டு பக்தர்கள் திரும்பிக் கொண்டிருந்தனர்.
புல்மேடு உப்புப்பாறை பகுதியில் இருந்து இரவு 10.30 மணிக்கு கிளம்பிய ஜீப் ஒன்றில், பக்தர்கள் அதிக அளவு ஏறினர். ஜீப் "செல்ப்' எடுக்காததால், பலர் இறங்கி ஜீப்பை தள்ளினர். திடீரென ஜீப் கிளம்பியது, கட்டுப்பாட்டை இழந்து கூட்டத்திற்குள் புகுந்தது. பின் 60 அடி பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் 75 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை 42 பேரது உடல் அடையாளம் தெரிந்தது. 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விபத்தைத் தொடர்ந்து அங்கு திடீர் நெரிசல் ஏற்பட்டதால், நெரிசலில் சிக்கி மேலும் பலர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பலியானவர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. மகரவிளக்கு பூஜை முடிந்து பொங்கல் பண்டிக்கைக்காக புல்மேடு வழியாக பக்தர்கள் தமிழகம் நோக்கி திரும்பிக்கொண்டிருக்கையில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. காயமடைந்தோர் வண்டிப்பெரியார், கோட்டயம் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இரவு நேரம் என்பதாலும், மழை பெய்து கொண்டிருந்ததாலும் மீட்புப்பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. கேரள உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன், போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
சம்பவம் குறித்த தகவல் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி உதவி எண்: 04869- 222049 (குமுளி போலீஸ் ஸ்டேஷன்)
0 comments :
Post a Comment