background img

புதிய வரவு

ஜெவுடன் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது ஏன்?-விஜயகாந்த்

சிதம்பரம்: மக்களை சந்திப்பதற்காகவே கோவையில் அதிமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் நான் பங்கேற்கவில்லை. நான் கூட்டத்துக்கு வர முடியாது என்பதை 2 நாட்களுக்கு முன்பே அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிடம் கூறி விட்டேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.

கடலூர் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்து அவர் பேசுகையில்,

கருணாநிதி தனது அனுபவத்தை எழுதப் போவதாகக் கூறியுள்ளார். அவரது அனுபவம் என்ன என்று எனக்கு புரியவில்லை. திருமாவளவன் என்னை வரலாறு படிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். வரலாறு எல்லோரும்தான் படிக்கிறோம். பூனை கருப்பா, வெள்ளையா? என்பது முக்கியமில்லை. பூனை எலியை பிடிக்கிறதா? என்பதை மட்டுமே பார்க்க வேண்டும். வரலாறு தெரிய வேண்டும் என்பதை விட மக்கள் பிரச்சனைகள்தான் முக்கியம்.

திமுகவின் சாதனைகளை கூறி வாக்கு கேட்க வேண்டும் என்று சோனியா காந்தி கூறியுள்ளார். தமிழகத்தில் அவர்கள் எந்த சாதனையும் செய்யவில்லையே,? ஏமாற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

மக்களுக்கு நல்லது செய்வதற்காக இங்கு வந்து இருக்கிறேன். இதற்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக உள்ளேன்.

மக்களை சந்திப்பதற்காகவே கோவையில் அதிமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் நான் பங்கேற்கவில்லை. உடனே நான் கூட்டத்திற்குச் செல்லாமல் புறக்கணித்து விட்டதாக மாறி மாறி, டி.வியில் போடுகின்றனர். நான் கூட்டத்துக்கு வர முடியாது என்பதை 2 நாட்களுக்கு முன்பே அதிமுக பொதுச் செயலாளரிடம் கூறி விட்டேன்.

ஜெயலலிதா கேபிள் தொழிலை அரசுடமையாக்குவேன் எனக் கூறியுள்ளார். அதில் ஆத்திரமடைந்துதான் என்மீது பொய் பிரசாரம் செய்கிறார்கள். நீங்கள் செய்ய வேண்டிய தெல்லாம் திமுகவை தோற்கடிப்பதுதான்.

சட்ட மேதை அம்பேத்கார் 18 மணி நேரம் படித்தார். அவர் மற்றவர்களை படி..படி.. என்றார். திருமாவளவன் அடி.அடி... என்கிறார். ஒரு தலைவர் இப்படியா சொல்வது?. இது தான் உங்கள் கொள்கை லட்சணம்.

திருமாவளவன் இலங்கை சென்று ராஜபக்ஷேவிடம் கை குலுக்கி விருந்து சாப்பிட்டு விட்டு, இங்கு வந்ததும் அவரை கைது செய்யக்கோரி நாடகமாடுகிறார். பிரபாகரன் தாயார் மருத்துவ சிகிச்சை பெற தமிழகம் வந்தபோது, காங்கிரஸ் அரசு அனுமதிக்கவில்லை. கருணாநிதி உண்மையான தமிழர் என்றால், உடனே காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறியிருக்க வேண்டாமா?.

இலங்கைக்குள் என்னை அனுமதிக்கவில்லை என்று கூறும் திருமாவளவன் பதவியை அல்லவா தூக்கி எறிந்து இருக்க வேண்டும். சென்ற தடவை அதிமுகவை தூக்கி வைத்துக்கொண்டு ஆடினார். இப்போது திமுகவை தூக்கி வைத்துக் கொண்டு ஆடுறார்.

ராமதாஸ் மதுக்கடைகளை ஒழிப்பேன் என்று பெண்களை வைத்து போராட்டம் நடத்தினார். ஆனால் இப்போது திமுகவோடு கூட்டணி வைத்துள்ளார். நான் தனித்தன்மை இழந்து விட்டதாக ராமதாஸ் சொல்கிறார். பத்தோடு பதினொன்றாக என்னை நினைக்கிறார். நான் பத்தில் முதல் கட்சி என்பதை நிரூபிக்கிறேன். இதே ராமதாஸ் தான் தி.மு.க. ஆட்சிக்கு ஜீரோ மார்க் போட்டார். ராமதாஸ் தன்னை போராளி, போராளி என்கிறார். அவர் எந்த விதத்தில் போராளி. மகனுக்காக கட்சி நடத்துகிறார். தனது மகனுக்கு ராஜ்யசபா உறுப்பினர் சீட் வேண்டும் என்பதற்காகத்தான் போராட்டம் நடத்துகிறார்.

பாமக-விடுதலை சிறுத்தைகள் சேர்ந்து விட்டதாகக் கூறுகின்றனர். அவர்கள் மீது உள்ள வழக்குகளில் இருந்து தப்பிக்கத் தான் கூட்டணி சேர்ந்துள்ளனர்.

கோடிக்கணக்கில் நான் பணம் பெற்றுக் கொண்டதாக எதிர் அணியினர் கூறி வருகின்றனர். அப்படி பணம் பெற்றிருந்தால் சிதம்பரத்தையே விலைக்கு வாங்கி இருப்பேன். எனக்கு பணம் முக்கியம் அல்ல. மக்கள் பிரச்சினைதான் முக்கியம். எனது மானசீக குருவான எம்.ஜி.ஆர். கட்சியுடன்தான் கூட்டணி வைத்துள்ளேன். வறுமையை போக்குவோம் என்று சோனியா கூறுகிறார். ஆனால் விலைவாசி உயர்வை காங்கிரஸ் அரசு ஏன் கட்டுப்படுத்தவில்லை?.

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இலங்கையை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. அதேபோல் தமிழகத்தில் அதிமுக கூட்டணி, திமுகவை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்கும். இங்கு முஸ்லீம்கள் அதிகம் பேர் வந்துள்ளனர். கூடாரம் வெவ்வேறாக இருந்தாலும் இதயத்தால் ஒன்று சேர வேண்டும். ஜெயலலிதா ஆட்சிக்கு வர வேண்டும்.

முன்னதாக சேத்தியாத்தோப்பு கூட்டத்தில் நரிக்குறவ பெண் ஒருவர் கொடுத்த பாசி மாலையை வாங்கி விஜயகாந்த் அணிந்து கொண்டார்.

தொண்டை வலி-விஜயகாந்த் நெய்வேலி பிரசாரம் ரத்து:

இந் நிலையில் தொண்டை வலி காரணமாக பேச இயலாததால், மருத்துவர்களின் அறிவுரையின்பேரில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நெய்வேலியில் நேற்று மாலை ஓய்வெடுத்தார். இதனால் அங்கு மேற்கொள்ளவிருந்த பிரசாரம் ரத்து செய்யப்பட்டது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts