background img

புதிய வரவு

'வைகோவை நம்ப வைத்து கழுத்தை அறுத்த ஜெ'-திருமாவளவன் தாக்கு

ஆம்பூர் & உளுந்தூர்பேட்டை: அதிமுக கூட்டணியில் நேற்று இருந்தவர்கள் இன்று இல்லை, அதன்படி வைகோவும் இப்போது இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.

ஆம்பூரில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜெ.விஜய் இளஞ்செழியனை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்கையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இது பலமான கூட்டணி.

அதிமுக கூட்டணியில் நேற்று இருந்தவர்கள் இன்று இல்லை. வைகோவும் இப்போது இல்லை. ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை. திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் ஒரே கொள்கை. அது இந்தியா மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டுமென நினைப்பது தான்.

திமுக தலைவர் கருணாநிதி கடுமையான உழைப்பாளி. பொருளாதார மேதையும் கூட. ஏழை, எளிய மக்களின் தேவையை அறிந்தவர். அதனால் தான் இலவசங்களை வழங்கினார். வரும் தேர்தலிலும் மிக்ஸி, கிரைண்டர் ஆகியவற்றை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளார். அவற்றை நிச்சயம் வழங்குவார்.

கடந்த அதிமுக ஆட்சியில் யானைகள் மீது தான் ஜெயலலிதா அக்கறை காட்டினார். மக்கள் மீது அக்கறை காட்டவில்லை. ஆனால் கருணாநிதிக்கு எப்பொழுதும் மக்கள் மீது அக்கறை உண்டு. யாருக்கு வாக்களிக்க வேண்டுமென சிந்தித்து செயல்பட வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் தான் மக்களுக்கு நல்ல திட்டங்களை வழங்க முடியும் என்றார்.

ஏமாற்றம் தந்த ஜெயலலிதா ஆட்சி-வாசன்:

மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் முதல்வர் கருணாநிதிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து பேசுகையில்,

திமுக ஆட்சியில் பல்வேறு சாதனைகள் செய்யப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியில் வேதனையையும், சோதனையையும், ஏமாற்றத்தையும் மக்களுக்கு அளித்தார்கள். உங்களுடைய வாக்கு வளர்ச்சிக்காக இருக்க வேண்டுமே தவிர, வீழ்ச்சிக்காக இருக்கக் கூடாது.

முதல்வர் கருணாநிதி மூத்த அரசியல் தலைவர். மதவாத சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, மதச்சார்பின்மைக்கு தோள் கொடுத்தவர். திருவாரூரில் மாணவராக வலம் வந்த முதல்வர், இன்று தமிழகத்தின் பெரும் தலைவராக உருவாகியுள்ளார்.

இதுவரை 11 முறை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் கருணாநிதி, தற்போது 12 வது முறையாக திருவாரூரில் போட்டியிடுகிறார். தமிழகத்தில் திமுக ஆட்சியில், மத்திய அரசு உதவியுடன் ஏராளமானத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இதற்கெல்லாம் காரணம் மத்திய, மாநில அரசுகளின் இணக்கமான போக்குதான் என்றார்.

துரோகம் செய்தவர் ஜெயலலிதா-திருமா:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உளுந்தூர்பேட்டை தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் மு.முகமது யூசுப்பை ஆதரித்து வாக்குச் சேகரித்தார்.

அப்போது பேசுகையில், 2006ல் நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தபோது, நமது கட்சியினருக்கு ஒருசில இடங்களை ஒதுக்கிவிட்டு, அந்த இடங்களில் நம்மை கேட்காமலேயே அதிமுக வேட்பாளர்களை அறிவித்து கூட்டணிக் கட்சியிலிருந்து வெளியேற்றி நம்மை அழிக்க துரோகம் செய்தவர்தான் ஜெயலலிதா.

ஆனால் அப்போது முதல்வர் கருணாநிதி நமது கட்சியினருக்கு ஆதரவு கரம் நீட்டி அவரது வேட்பாளருக்கு அறிவித்த ஒரு சில இடங்களை வாபஸ் பெற்று நமது கட்சியினருக்கு பதவிகளை வாரி வழங்கி பெருமை செய்தவர்.

சிட்டுக் குருவிகளுக்குக்கூட வீடு இருக்கிறது. ஆனால் மனிதர்களாகிய இவர்களுக்குச் சொந்தமாக வீடுகள் இல்லை. இவர்களுக்கு குடிசை வீடுகளை அகற்றி காரை வீடுகள் வழங்கியவர் முதல்வர் கருணாநிதி.

ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் செய்த சாதனை என்னவென்றால் அவர்களுக்குப் பிடிக்காதவர்களை சிறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதுதான் சாதனை. ஜெயலலிதாவையே நம்பியிருந்த அண்ணன் வைகோவை நம்பவைத்து கழுத்தை அறுத்துவிட்டார். அவருக்கு செய்தது பச்சை துரோகம் என்றார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts